“மன்சூர் அலி கானின் கருத்துகள் ஒட்டுமொத்த பெண்களையும் இழிவுபடுத்துகிறது” – நடிகர் சிரஞ்சீவி

மன்சூர் அலி கானின் கருத்துகள் மொத்த பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக நடிகர் சிரஞ்சீவி தனது X தளப் பதிவில் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் கடந்த மாதம்…

மன்சூர் அலி கானின் கருத்துகள் மொத்த பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக நடிகர் சிரஞ்சீவி தனது X தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் கடந்த மாதம் 19-ம் தேதி வெளியானது.  த்ரிஷா,  கௌதம் மேனன்,  அர்ஜூன்,  சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில்,  மன்சூர் அலி கான் விஜயின் நெருங்கிய நண்பராக நடித்திருந்தார்.

இதனிடையே சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் மன்சூர் அலி கான்,  த்ரிஷா குறித்து தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருந்தார்.  மன்சூர் அலி கானின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  நடிகை த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி த்ரிஷாவிற்கு ஆதரவு தெரிவித்தும், மன்சூர் அலி கானை கண்டித்தும் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது:

“த்ரிஷா குறித்து மன்சூர் அலி கான் கூறிய சில கண்டிக்கத்தக்க கருத்துக்கள் என் கவனத்தை ஈர்த்தன. இந்த மாதிரியான கருத்துகள் ஒரு நடிகையை மட்டுமல்லாமல், மொத்த பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.  அவை வக்கிரத்தன்மை அதிகம் கொண்டவையாக உள்ளது.

நான் த்ரிஷாவுக்கு மட்டுமல்லாமல் இதுபோன்ற தகாத வார்த்தைகளை எதிர்கொள்ளும் அனைத்து பெண்களுக்கும் துணை நிற்பேன்”.

இவ்வாறு நடிகர் சிரஞ்சீவி தனது X தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.