மன்னார்குடியில் முன்விரோதத்தால் நான்கு பேர் கொண்ட கும்பல் தேநீர் கடையில் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ருக்கமணி பாளையம் சாலையில் செந்தில் என்பவர்
தேநீர் கடை நடத்தி வருகிறார். மன்னார்குடியை சேர்ந்த குமாஸ்தா வேலை
பார்த்து வரும் ரமேஷ் என்பவரின் நண்பர் கண்ணப்பன் என்பவர் நேற்று முன்தினம்
கடைக்கு வந்து கிழிந்த 10 ரூபாய் நோட்டை கொடுத்து தின்பண்டம் வாங்கியதாக
கூறப்படுகிறது.
அப்போது கிழிந்த ரூபாய் நோட்டு செல்லாது, என கடையின் ஊழியர் புருஷோத்தமன்
கூறியுள்ளார். இதனால் கடை ஊழியர் புருஷோத்தமனுக்கும் கண்ணப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குமாஸ்தா ரமேஷ், கண்ணப்பன், முன்னாள் கவுன்சிலர் மதி என்பவரின் மகன்கள் மதி முத்துகுமார், மதி மணிவண்ணன், என நான்கு பேர் கடைக்குள் புகுந்து கடை ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.
மேலும், மது போதையில் இருந்த குமாஸ்தா ரமேஷ் கடை ஷட்டரை இழுத்து பூட்டி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். ரமேஷ் உடன் வந்த மற்ற மூன்று நபர்கள் கடைகாரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கடையை இழுத்து பூட்டி வன்முறையில் ஈடுபட முயன்ற குமாஸ்தா ரமேஷ் மீது வர்த்தக சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
—ம. ஶ்ரீ மரகதம்







