நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யாவை தொடர்ந்து பிதாமகன் படத்தின் தயாரிப்பாளர் வி. ஏ துரை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூபாய் 3 லட்சம் நிதி உதவி அளித்து உள்ளார்.
விக்ரம், சூர்யா, விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து, என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. 2003-ம் ஆண்டு பாலா இயக்கத்தில், விக்ரம்-சூர்யா நடிப்பில் வெளியான பிதாமகன் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் மாபெரும் வெற்றி அடைந்தது. ஆரம்பத்தில் பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.இரத்தினத்திடம் தயாரிப்பு நிர்வாகத்தில் பங்கெடுத்தவர் பின்னர் சொந்தமாக, எவர்கிரீன் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த பாபா திரைப்படத்திலும், நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது மனைவி, மகளை பிரிந்து விருகம்பாக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வரும் தயாரிப்பாளர் வி.ஏ.துரை சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறார். மருத்துவ செலவிற்கு கூட வழியில்லாமல் மிகவும் கஷ்டமான சூழலில் வாழ்ந்து வரும் வி.ஏ.துரை இயக்குநர் எஸ் பி முத்துராமன் அவர்களின் உதவியால், சிகிச்சை பெற்று, ஓரளவிற்கு உடல்நலம் தேறி, எழுந்து உட்காரும் அளவிற்கு முன்னேறினார். இருப்பினும் காலில் ஆறாத ரணத்துடன், புண்கள் ஆறாத நிலையில், உடல் மெலிந்து அன்றாட மருத்துவ செலவுகளுக்கே பணம் இல்லாமல் தவித்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு உதவி கேட்டு, அவரது நண்பர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டதை தொடர்ந்து, நடிகர் சூர்யா 2 லட்சம் ரூபாயும் , கருணாஸ் 50 ஆயிரம் ரூபாய் நிதி கொடுத்து உதவிக்கரம் நீட்டினர். இதையடுத்து சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் தவிக்கும் தயாரிப்பாளர் வி ஏ துரையை, நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்ததோடு, நான் பார்த்துக்கொள்கிறேன் கவலைப்பட வேண்டாம் என நம்பிக்கை அளித்து அவரது முழு மருத்துவச் செலவையும் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யாவை தொடர்ந்து தற்போது அண்ணா நகரில் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும், தயாரிப்பாளர் வி.ஏ துரையின் மருத்துவ செலவிற்கான ரூபாய் 3 லட்சத்தை நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் மருத்துவமனையில் செலுத்தி உதவியிருக்கிறார்.
- பி.ஜேம்ஸ் லிசா









