சட்டப்பேரவையில் இபிஎஸ் – ஓபிஎஸ் அணிகளை இணைத்த 58 கிராம கால்வாய் பிரச்னை

உசிலம்பட்டி தொகுதியில் 58 கிராம கால்வாயை சிமெண்ட் கால்வாயாக கட்டித்தர ஓபிஎஸ் அணியும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து கோரிக்கை வைத்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய உசிலம்பட்டி எம்.எல்.ஏவும் ஓபிஎஸ்-ன்…

உசிலம்பட்டி தொகுதியில் 58 கிராம கால்வாயை சிமெண்ட் கால்வாயாக கட்டித்தர ஓபிஎஸ் அணியும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து கோரிக்கை வைத்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய உசிலம்பட்டி எம்.எல்.ஏவும் ஓபிஎஸ்-ன் ஆதரவாளருமான ஐயப்பன், உசிலம்பட்டியில் 58 கிராம கால்வாயில், புதூர் முதல் புள்ளிமான் கொம்பு வரை சிமெண்ட் கால்வாயாக கட்டித்தர அரசு முன் வருமா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உசிலம்பட்டி வறட்சியான இடம் என்பதால் 1996 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் 58 கிராம கால்வாய் திட்டம் 33.61 கோடி மதிப்பில் கொண்டு வரப்பட்டதாகவும், அதனை சிமெண்ட் கால்வாயாக மாற்றினால் நீரின் ஓதம் மற்ற இடங்களுக்கு பரவாது என்றும், அதனால் கால்வாய் பழுதுள்ள இடங்களில் மட்டும் சிமெண்ட் கால்வாய் அமைத்து சீர் செய்யப்படும் என்றும் கூறினார்.

இதையும் படியுங்கள் : பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றம்செய்வோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

அவரைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் திண்டுக்கல் சினிவாசன், உசிலம்பட்டி ஐயப்பனின் கேள்வி மக்களுக்கானது. சிமெண்ட் கால்வாய் அமைக்காதது மக்களை பாதித்து வருகிறது. 58 கிராம கால்வாய் திட்டம் கருணாநிதியால் துவங்கப்பட்டாலும், அதிமுக ஆட்சியில் தான் முடிக்கப்பட்டது. இதில் எங்கள் சாதனையும் உள்ளது என்று கூறினார்.

பின்னர் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 58 கிராம கால்வாய் திட்டம் கருணாநிதியால் துவங்கப்பட்டாலும், பலமுறை திட்ட மதிப்பீடு மாற்றப்பட்டு 16 வருடங்களுக்கு பிறகு ரூ.90 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டது. இந்த கால்வாய்க்கு வைகை அணை நிரம்பும் போதும், ராமநாதபுரம் பெரிய கண்மாய் நிரம்பும்போதும் தான் தண்ணீர் திறக்கும் வகையில் அரசாணை உள்ளது. மிகப் பெரிய பேய் மழை பெய்தால் தான் வைகை அணையும் ராமநாதபுரம் பெரிய கண்மாயும் நிரம்பும். அதனால் அந்த அரசாணையை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், இந்த கால்வாய் கருணாநிதியின் கனவு திட்டம். அதனை கண்போல காப்போம் என்று பதிலளித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.