திருச்சியில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலில் கூலித்தொழிலாளி ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி ஏர்போர்ட் பாரதி நகரைச் சேர்ந்தவர் அருண் (வயது25) பெயிண்டரான இவர் கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜாகீர், கண்ணன் என்கிற பிரேம், தர்மா, முபாரக் ஆகியோருக்கும் கஞ்சா விற்பனை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில் அருண் அங்குள்ள மைதானம் ஒன்றில் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இது குறித்து தகவலறிந்த ஏர்போர்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய அருணை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அருண் உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக முபாரக், தர்மா, பிரேம், ஜாகீர் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.







