குல்பூஷண் ஜாதவ் மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்திய கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரி குல்பூஷண் ஜாதவ். இவர் கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவிற்கு உளவு பார்த்ததாகக் கூறி பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குல்பூஷண் ஜாதவிற்கு தூக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை எதிர்த்து, குல்பூஷண் ஜாதவ் மேல்முறையீடு செய்ய உரிமை வழங்க வேண்டும் என சர்வதேச நீதி மன்றத்தில் இந்திய அரசு வழக்கு தொடர்ந்தது. இதை தொடர்ந்து குல்பூஷண் ஜாதவின் வழக்கில் மேல் முறையீடு செய்து கொள்ள சர்வதேச நீதிமன்றம் 2019ம் ஆண்டு உத்தவிட்டதால் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் பாகிஸ்தானின் சட்டம் அதற்கு அனுமதியளிக்காததால் இதுவரை எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்தது.
இந்நிலையில் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து பாகிஸ்தானில் கூடிய நாடாளுமன்றம் குல்பூஷண் ஜாதவ் மேல் முறையீடு செய்ய அனுமதியளிக்கும் மசோதாவை தாக்கல் செய்தது. ஆனால் இந்த மசோதாவிற்கு பாகிஸ்தானில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது. பின்னர் ஆளும் கட்சியால் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனால் குல்பூஷண் ஜாதவின் தூக்கு தண்டனை ரத்து செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.







