தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. இந்த நிலையில், அதிமுக தலைமை மீதுள்ள அதிருப்தி காரணமாக, அதிமுக எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, விராலிமலை சி. விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன. ஏற்கனவே முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று, திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இதனால் தமிழகத்தில் மொத்தம் 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், காலியான தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழலில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளைத் தவிர்த்து மற்ற தொகுதிகளில் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6-ஆம் தேதி (நாளை மறுநாள்) இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தேர்தலில் தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, அதிமுக, இடதுசாரிகள் மற்றும் நாம் தமிழர் என 5 முனைப் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சர் விஜய் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் ரோடு ஷோ நடத்தினார். மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் விதிகளின்படி இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதேபோல், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் நாளை மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதனைத் தொடர்ந்து, அக். 9-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.




