தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி மும்பையில் போராட்டம்!

SIR முறைகேடு, EVM பயன்பாடு உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, உத்தவ் தாக்கரே ராஜ் தாக்கரே தலைமையில் மும்பையில் பேரணி நடைபெற்றது.

தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கை மூலம் தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை மும்பையில் மட்டுமின்றி பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் அமைப்புகளின் போராட்டங்களிலும் முன்வைக்கப்பட்டு வருகிறது. மும்பை சிவாஜி பூங்காவில் சில நாட்களுக்கு முன்பு ‘Cockroach Janta Party (CJP)’ என்ற Gen-Z இளைஞர் இயக்கமும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக ‘சிறை நிரப்பும் போராட்டத்தை’ நடத்தினர்.

மகாராஷ்டிராவில் SIR-க்கு முன்பு 9.78 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 7.71 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். அதாவது, முந்தைய வாக்காளர் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 2.06 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வரைவு பட்டியலில் இடம்பெறவில்லை.

இன்று மகாராஷ்டிராவில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தமான SIR பணியில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி மும்பையில் எதிர்க்கட்சிகள் சார்பில் பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது. சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் இணைந்து இந்தப் பேரணிக்கு தலைமை வகித்தனர். நீண்ட காலத்துக்குப் பிறகு இரு தாக்கரே சகோதரர்களும் ஒரே போராட்டத்தில் இணைந்தது அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.

‘விராட் கர்ஜனா மோர்ச்சா’ எனப் பெயரிடப்பட்ட இந்தப் பேரணி, தெற்கு மும்பையில் உள்ள மெட்ரோ சினிமா பகுதியில் இருந்து தொடங்கி, பிரஹன் மும்பை மாநகராட்சி தலைமையகம் நோக்கி நடைபெற்றது. இந்தப் பேரணியில் காங்கிரஸ் கட்சி மற்றும் சரத்பவார் தலைமையிலான
தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP-SP) தலைவர்களும் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ராஜ் தாக்கரே பேசியதாவது: மகாராஷ்டிராவில் மேற்கொள்ளப்படும் SIR நடவடிக்கையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.மேலும், நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களான EVM மூலம் வாக்களிக்கும் முறையை நிறுத்திவிட்டு, மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும். “2017-18ஆம் ஆண்டிலிருந்தே இங்கு ஏதோ தவறு நடப்பதாகக் கூறி வருகிறேன். வாக்குகளின் எண்ணிக்கை திடீரென எப்படி குறைய முடியும்?” மேலும், ஆட்சியில் யார் இருக்க வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய முடியாது, அதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று அவர் தெரிவித்தார்.

போராட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசியதாவது: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறித்துவிட்டார். SIR நடவடிக்கையின் நோக்கம் வாக்காளர் பட்டியலில் உள்ள வங்கதேசத்தவர்களை நீக்குவது என்றால், இதுவரை எத்தனை வங்க தேசத்தவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்? என்று அவர் பேசினார். தேர்தல் நடைமுறையில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என உத்தவ் தாக்கரே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

SIR பணிகளுக்குப் பிறகு மகாராஷ்டிராவின் இறுதி வாக்காளர் பட்டியல் நவம்பர் 4ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், SIR நடவடிக்கை, வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான பெயர்கள் விடுபட்ட விவகாரம் மற்றும் EVM தொடர்பான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள், மகாராஷ்டிரா அரசியலில் தற்போது முக்கிய விவாதமாக மாறியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.