நடிகர் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூருடன் இணைந்து நடித்த ‘தேவரா: பாகம் 1’ படத்தின் பிரபல பாடலான ‘சுட்டமல்லே’ பாடலின் வீடியோவை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மார்பிங் செய்து வெளியிட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜூனியர் என்டிஆர், இதனை “அருவருப்பு, கேவலம், வெட்கமற்ற செயல்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: “பெண்களை தாயாகவும், தெய்வமாகவும் போற்றும் நாட்டில், ‘மாத்ருதேவோ பவ’ என்பது வெறும் வார்த்தையாக இல்லாமல் நமது கலாசாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நிலையில், சிலர் ஒரு பெண்ணை மிகவும் கேவலமான முறையில் விமர்சிக்கும் அளவுக்கு தாழ்ந்து சென்றுள்ளனர்.
ஒரு பெண்ணை விமர்சிக்கும் வகையில் இதுபோன்ற மோசமான உள்ளடக்கத்தை உருவாக்க AI-ஐ பயன்படுத்துவது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வெட்கக்கேடானது. மார்பிங் செய்யப்பட்ட ‘சுட்டமல்லே’ வீடியோவை உருவாக்கி, பரப்பியவர்களுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நான் விட்டுவைக்க மாட்டேன். இதை உருவாக்கியவர்கள் மற்றும் பரப்பியவர்கள் மீது சாத்தியமான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.
இதுபோன்ற உள்ளடக்கத்தை தயவுசெய்து பார்க்கவோ, பகிரவோ அல்லது அதில் ஈடுபடவோ வேண்டாம். இன்று இது வேறு ஒருவருக்கு நடந்திருக்கலாம். நாளை இது உங்கள் தாய், சகோதரி, மனைவி அல்லது மகளுக்கு எதிராகவும் இருக்கலாம். இது மிகவும் தீவிரமான பிரச்சினை. AI தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அனைத்து மாநில அரசுகளும், இந்திய அரசும் வலுவான நடவடிக்கை எடுத்து, கடுமையான விதிமுறைகளை கொண்டு வர வேண்டும்” என ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார்.




