பள்ளி ஆட்டோ மீது சொகுசு கார் மோதி விபத்து; மாணவர்கள் படுகாயம்

வாழப்பாடி அருகே சாலையைக் கடக்க முயன்ற, தனியார் பள்ளியின் மினி ஆட்டோ மீது சொகுசு கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த 5 மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள புத்திரகவுண்டன்…

வாழப்பாடி அருகே சாலையைக் கடக்க முயன்ற, தனியார் பள்ளியின் மினி ஆட்டோ மீது சொகுசு கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த 5 மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள புத்திரகவுண்டன் பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான மெட்ரிக்குலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவர்களில் 13 பேரைப் பள்ளிக்குச் சொந்தமான மினி ஆட்டோ மூலம் ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஓட்டுநர் வாழப்பாடிக்குச் சென்றுள்ளார். அப்போது தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது புத்திரகவுண்டன் பாளையம் பிரிவு சாலையில் ஆத்தூரிலிருந்து சேலம் நோக்கி அதிவேகமாக வந்த சொகுசு கார் மினி ஆட்டோவின் பின் பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து ஆட்டோவில் பயணம் செய்த 13 மாணவர்களில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

இதையறிந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த மாணவர்களை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்துத் தகவலறிந்த ஏத்தாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் பள்ளி மாணவர்கள் 5 பேர் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.