கடந்த ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற விமான விபத்திற்கு விமானியின் தவறுகளே காரணம் என தற்போது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி துபாயில் இருந்து கோழிக்கோடுக்கு 184 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்களுடன் திரும்பிய ஏர் இந்தியா விமானம் திடீரென ஓடுபாதையிலிருந்து விலகி விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் இரு விமானிகள் மற்றும் 19 பயணிகள் என 21 பேர் உயிரிழந்தனர். மீட்பு நடவடிக்கையில் உள்ளூர் மக்கள் உடனடியாக ஈடுபடுத்தப்பட்ட காரணத்தால் கடும் மழையிலும் மீட்பு நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விபத்து குறித்து விமான விபத்து விசாரணை பணியகம் தனது விசாரணையை தொடங்கியது.
விசாரணை முடிவடைந்த நிலையில் “விமானியின் தவறுகளே இந்த விபத்திற்கு காரணம். விமானம் புறப்பட்டதிலிருந்து அவர் நிலையற்ற அணுகுமுறையை பின்பற்றியுள்ளார். அவர் நிலையான இயக்க செயல்முறையை முறையாக கடைப்பிடிக்கவில்லை. தரையிறங்கும் நேரத்தில் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கோ அரோவுண்ட் என அறிவுறுத்தப்பட்டதாகவும், ஆனால் இந்த அறிவுறுத்தலை விமானி பின்பற்றவில்லை என தனது அறிக்கையில் விமான விபத்து விசாரணை பணியகம் தெரிவித்துள்ளது.
‘கோ அரோவுண்ட்’ என்பது விமானம் தரையிறங்கும் நேரத்தில் தரையிறங்காமல் வானில் ஒருமுறை வட்டமடித்துவிட்டு மீண்டும் தரையிறங்கும் முறையாகும். ஓடுதளத்தில் ஏதேனும் சிக்கல் இருப்பின் இம்முறை பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்திற்கு ஓடுதளத்தில் இருந்த மழைநீர் முக்கிய காரணமாக கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.








