சத்தீஸ்கர் மாநிலத்தில் கரியாபந்த் மாவட்டத்தில் லாரி-டிராக்டர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் மஜ்ரகட்டா கிராமத்தை சேர்ந்த சிலர் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக அருகில் உள்ள வேறு ஊருக்கு சென்று டிராக்டரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கரியாபந்த் மாவட்டம் ஜோபா கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த டிராக்டர் மீது அந்த வழியே வந்த லாரி மோதியது. உடனடியாக அந்த பகுதியில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்ததுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விரைந்து வந்த காவல்துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்த துயர சம்பவம் குறித்து அறிந்த அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தனது இரங்கலை தெரிவித்தார். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ .2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.







