“மொட்டறா மலர் பறித்
திறைஞ்சிப் -பத்தியாய்
நினைத்து பரவுவார்
தமக்குப் பரகதி
கொடுத்தருள் செய்யுஞ்
சித்தனே” என்பது திருவாசக வரிகள்.
சோழ நாட்டில் திருப்புகலூர் புகழ்பெற்ற சிவத்தலம். இங்கு,வாழ்ந்த,நான்கு மறைகள் நன்கு உணர்ந்த விதி வழுவாது,சிவனிடத்தில் மெய்யன்புடன் பக்தி செய்பவர் முருக நாயனார்.
இவர்,விடியற்காலை வைகறையில் எழுந்துக் காலைக்கடன்கள்,குளியலை முடித்து,திரு வெண்ணீறை மேனியில் பூசிக் கொண்டு,மனம் வேறுபடாது சிவத்தில் ஒன்றி,கூடைகளைத் தூக்கிக்கொண்டு மலர் வனம் செல்வார்.
அங்கு, கோட்டுப் பூக்களாகிய கொன்றை, செண்பகம் போன்றவற்றையும், கொடிபூக்களாகிய முல்லை, செம்பங்கி முதலியவற்றையும், நீர்ப் பூக்களால் நீலோத்பலம் ஆகியவைகளையும், நிலப்பூக்களான அலரி, தும்பை போன்ற பல வண்ண மலர்களைக் கொய்து,பின் காய்ந்த, அடிபட்ட உதிர்ந்த புழுக்கடி, எச்சமுடைய பூக்களை ஒதுக்கிவிட்டு, தனித்தனி கூடைகளில் நிரப்புவார். 
அவற்றைத் தூக்கி வந்து, சிவாலயத்தில், சுத்தமாக்கிய ஓரிடத்தில் வைத்து, தானும் அமர்ந்து, கோவை மாலை, தொங்கல் மாலை, பத்திமாலை, சரமாலை, கொண்டை மாலை போன்ற பலவகை மாலைகளை அழகுடன் தொடுத்துக் கட்டி, வர்த்தமானீச்சரம் பரமசிவனார்க்கு சாற்றி அர்ச்சனை செய்து,பஞ்சாட்சர மந்திரத்தை ஜபிப்பார். 
வெளியிடங்களிலிருந்து சிவனடியார்கள் வருகிற சமயங்களில்,தங்க வைக்க திருமண்டபமும் கட்டி அங்கு அடியார்கள் அமுதுண்ணவும் ஏற்பாடு செய்திருந்தார். அப்பர், சிறு தொண்டர், திருநீலநக்கர், முக்கியமாக திருஞான சம்பந்தர் ஆகியோர் நண்பர்களாயினர்.
“சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே, உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே” என்றும், பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக, அந்தப் பரவசத்தில் உள்ளே உயிர் உருக, சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக, எந்தன் சந்ததியே உந்தனுக்கு அடி பணிய என்று உள்ளம் உருகிய இவர், இறுதியில், திருஞான சம்பந்தரின் திருமணத்தில் கலந்து கொண்டு, திருநெல்லூரில், இறைவன் அருளிய பேரொளியில் ஞானசம்பந்தருடன் தாமும் புகுந்து, இறைவன் திருவடி நிழலை அடைந்தார். இவரின் குருபூஜை, வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.. முருக நாயனாரை வணங்கி, நாமும் இறையருள் பெறுவோம்.







