முன்னாள் பிரதமர் வி.பி.சிங்!
இந்தியாவின் காங்கிரஸ் அல்லாத 2-ஆவது பிரதமராக 1989-ஆம் ஆண்டு பதவியேற்றவர் வி.பி.சிங். மாநிலக் கட்சிகளான திமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தேசிய முன்னணி கூட்டணியை உருவாக்கினார். அதற்கு பயன் அளிக்கும் வகையில் அவர் 1989 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 7-ஆவது பிரதமராக பொறுப்பேற்றார்.இவருடைய ஆட்சிக்கு ஒரு சில புரிந்துணர்வுடன் பாஜகவும் ஆதரவு அளித்தது.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை 27 சதவீதமாக உயர்த்துமாறு மண்டல் கமிஷன் பரிந்துரைத்தது. பிரதமராக பொறுப்பேற்ற வி.பி.சிங் மண்டல் பரிந்துரைகளை அமல்படுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. இந்த போராட்டங்கள் வி.பி.சிங் ஆட்சிக்கு கடுமையான நெருக்கடியை கொடுத்தது.
இந்த பிரச்னை முடிவுக்கு வருவதற்குள் 1990-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி பாஜக அயோத்தியை நோக்கி ராம் ரத யாத்திரையை மேற்கொண்டது. இதையடுத்து, உத்தர பிரதேச எல்லையில் நுழைவதற்கு முன்பு அத்வானி கைது செய்யப்பட்டார்.அத்வானி மீதான இந்த கைது நடவடிக்கையால் வி.பி.சிங் ஆட்சி மீதான ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது. அதனால், பிரமதர் பதவி வகித்து 1 ஆண்டு நிறைவடைவதற்குள் தனது பதவியை அவர் ராஜிநாமா செய்ய நேரிட்டது. இவர் நவம்பர் 27, 2008 ல் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். இவருடைய 18வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“சமூகநீதியை நிலைநாட்டுவதையே தன் இலக்காகக் கொண்டு ஆட்சியைச் செலுத்திய முன்னாள் பிரதமர் – மண்டல் நாயகர் வி.பி. சிங்கின் நினைவு நாள் இன்று! இந்தியா முழுவதும் கடந்த 30 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மேலெழுந்து வருவதற்குக் காரணம் அவர் துணிச்சலாக அளித்த இடஒதுக்கீடு. “எனது கால் உடைந்திருந்தாலும் நான் அடிக்க வேண்டிய Goal-ஐ அடித்துவிட்டேன்” என்றார் வி.பி. சிங் . அன்று அவரை Great எனத் தமிழ்நாடும் தலைவர் கலைஞரும் கொண்டாடினார்கள்.
தனது மைனாரிட்டி ஆட்சியையும் முதலமைச்சர் பதவியையும் காப்பாற்றிக் கொள்வதற்காக எவ்வளவு கீழ்த்தனமான செயல்களையும் செய்யத் துணிந்துவிட்ட இன்றைய ஆட்சியாளர்களைப் பார்க்கும்போது, வி.பி.சிங்கை Greatest Of All Time எனக் கொண்டாடத் தோன்றுகிறது. பதவி, பொறுப்புகளைவிட செய்ய வந்த பணி முக்கியமென வாழ்ந்து காட்டிய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் புகழ் நீடு வாழ்க!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





