துணைவேந்தர் தேர்வு முதல் பட்டமளிப்பு வரை.. முதல்வர் விஜய்க்கு ஆளுநர் கடிதம்!

தமிழகப் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்பவும், நிலுவையில் உள்ள பட்டமளிப்பு விழாக்களை விரைந்து நடத்தவும் முதல்வர் விஜய் தலையிட வேண்டும் என ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் விஜய்க்கு ஆளுநர் கடிதம்!

தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், முதலமைச்சர் விஜய்க்கு நவம்பர் – 26 வியாழக்கிழமை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் துணைவேந்தர் பணியிடங்களை நிரப்புவதற்கும், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பட்டமளிப்பு விழாக்களை விரைந்து நடத்துவதற்கும் முதலமைச்சர் தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் பல்கலைக்கழகங்களின் அன்றாட நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும், முழுநேர துணைவேந்தர்களை நியமிப்பதற்கான உரிய ஏற்பாடுகளை மேற்கொள்வது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழகச் சட்டங்கள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) விதிமுறைகளுக்கு உட்பட்டு துணைவேந்தர் நியமனங்களை மேற்கொள்வதன் மூலம் நிர்வாகச் செயல்பாடுகளையும் கல்விப் பணிகளின் தொடர்ச்சியையும் உறுதிப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

அரசின் குழுவின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி

தற்போது பல்கலைக்கழகங்கள் தொடர்பான நிர்வாக முடிவுகள், தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழு (Convener Committee) மூலம் எடுக்கப்படுவதாக ஆளுநர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் அன்றாட நிர்வாகம் மற்றும் கல்வி சார்ந்த தேவைகளுக்கான முடிவுகளை அந்தந்த நிறுவனங்களின் அளவிலேயே எடுக்க வேண்டியுள்ளது. இதனால் தற்போதுள்ள ஒருங்கிணைப்புக் குழு போதிய செயல்திறனுடன் செயல்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நிலுவையில் உள்ள பட்டமளிப்பு விழாக்களை விரைவாக நடத்துவதற்காக ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் தனித்தனியாக அட்டவணை தயாரிக்க வேண்டும் என்றும், சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட இடங்களில் விரைந்து விழாக்களை நடத்தி மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

துணைவேந்தர் தேர்வுக் குழுவில் மாற்றம்?

துணைவேந்தர்களைத் தேர்வு செய்வதற்கான தேடுதல் மற்றும் தேர்வுக் குழுக்களின் (Search-cum-Selection Committee) அமைப்பு குறித்தும் ஆளுநர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, பல்கலைக்கழக மானியக் குழுவின் 2018-ம் ஆண்டு விதிமுறைகளில் உள்ள 7.3 (ii) பிரிவின்படி, UGC தலைவரின் பிரதிநிதி தேர்வுக் குழுவில் இடம்பெறுவது தொடர்பான விவகாரமே முக்கியப் பிரச்சினையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்குத் தீர்வுகாணும் வகையில், சட்ட விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டு, ஆளுநரின் பிரதிநிதி, பல்கலைக்கழக சிண்டிகேட்டின் பிரதிநிதி, UGC தலைவரின் பிரதிநிதி மற்றும் தமிழக அரசின் பிரதிநிதி என நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளார். இதன் மூலம் பரஸ்பர ஆலோசனையின் அடிப்படையில் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுடன், வெளிப்படையான மற்றும் தகுதி அடிப்படையிலான தேர்வு முறையை உருவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

துணைவேந்தர் நியமனத்திற்கு காலக்கெடு!

துணைவேந்தர் தேர்வு மற்றும் பரிந்துரை நடைமுறைகள் குறித்தும் ஆளுநர் சில வழிமுறைகளை முன்வைத்துள்ளார். அதன்படி, துணைவேந்தர் பணியிடம் காலியாகும் என எதிர்பார்க்கப்படும் தேதிக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே தேர்வுக் குழு தனது பணிகளைத் தொடங்க வேண்டும். குழு அமைக்கப்பட்ட 15 நாட்களுக்குள் காலிப்பணியிடத்திற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். அறிவிப்பு வெளியான இரண்டு மாதங்களுக்குள் விண்ணப்பங்களைப் பரிசீலித்து நேர்காணல்களை நிறைவு செய்ய வேண்டும். மேலும், தகுதியான மூன்று விண்ணப்பதாரர்களை ஒருமனதாகத் தேர்வு செய்து, அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தரவரிசை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் விஜய் தலையிட ஆளுநர் வலியுறுத்தல்!

இந்த விவகாரத்தில் பரஸ்பர ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பின் மூலம் விரைவான, நீடித்த தீர்வைக் காண முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையைச் செயல்படுத்தவும், நிலுவையில் உள்ள பட்டமளிப்பு விழாக்களை விரைந்து நடத்தவும் முதலமைச்சர் விஜய் நேரடியாகத் தலையிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். பல்கலைக்கழகங்களின் நலன் மற்றும் பட்டங்களுக்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.