“நீதித்துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்!” – குடியரசுத் தலைவர் முர்மு!

நீதித்துறையில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்தால் சமூகத்தில் நீதி, சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மை மேம்படும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு தின விழாவில் குடியரசுத் தலைவர் பேச்சு!

இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நவம்பர் 26 – வியாழக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் தலைமை நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய குடியரசுத் தலைவர், நீதித்துறையின் அமர்வு மற்றும் வழக்கறிஞர் அமைப்புகளில் பெண்களின் அதிகப்படியான மற்றும் சுறுசுறுப்பான பங்கேற்பு, சமூகத்தை மேலும் நியாயமானதாகவும், சமத்துவம் நிறைந்ததாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்ற உதவும் என்று தெரிவித்தார்.

நீதித்துறை முடிவுகளில் பெண்களின் பார்வை அவசியம்!

நீதித்துறை முடிவெடுக்கும் நடைமுறையில் பெண்களின் பங்களிப்பு பல்வேறு கண்ணோட்டங்களையும், சமநிலையையும் உருவாக்கும் என்று குறிப்பிட்ட அவர், இந்திய அரசியலமைப்புச் சபையின் முன்னாள் உறுப்பினரான ஹன்சா மேத்தாவின் பங்களிப்பை உதாரணமாகச் சுட்டிக்காட்டினார். 1947-48-ம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரகடனம் (UDHR) தயாரிக்கப்பட்டபோது, இந்தியாவின் பிரதிநிதியாக ஹன்சா மேத்தா அதற்கான ஆலோசனைகளில் பங்கேற்றார். அந்தப் பிரகடனத்தின் முதல் விதியில் இடம்பெற்றிருந்த “அனைத்து ஆண்களும் சுதந்திரமாகவும் சமமாகவும் பிறக்கின்றனர்” என்ற வாசகத்தை, அவரது முயற்சியால் “அனைத்து மனிதர்களும் சுதந்திரமாகவும் சமமாகவும் பிறக்கின்றனர்” என மாற்றியமைக்கப்பட்டது.

பெண்களின் பார்வை நீதித்துறை முடிவுகளில் உள்ளடக்கம், பன்முகத்தன்மை மற்றும் சமநிலையை ஏற்படுத்தும் என்று தெரிவித்த குடியரசுத் தலைவர், இந்திய நீதித்துறையின் வளர்ச்சிக்கு பெண்கள் ஏற்கெனவே மதிப்புமிக்க பங்களிப்புகளைச் செய்துள்ளதாகவும், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களாக பெண்களின் பங்கேற்பை மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், நீதிபதிகள் நியமனத்தில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் முன்னிலையில் பேசிய அவர், உள்ளடக்கத்தன்மை மற்றும் தகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது நீதித்துறையை மேலும் வலுப்படுத்தும் என்றார்.

நக்சல்களாக மாறியவர்களின் பின்னணியை ஆராய வேண்டும்!

இந்தியாவை நக்சல் பாதிப்பில்லாத நாடாக மாற்றுவதற்காக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு குடியரசுத் தலைவர் பாராட்டு தெரிவித்தார். அதேநேரத்தில், அப்பாவி கிராம மக்கள் நக்சல்களாக மாறுவதற்கான காரணங்களை நீதித்துறை ஆராய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சரணடைந்த நக்சல்களின் முகங்களைப் பார்க்கும்போது அவர்கள் அப்பாவிகளாகத் தெரிவதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களை நக்சல்களாக மாற்றியது யார், அதற்கான பின்னணி என்ன என்பதை ஆராய்ந்து அதற்குத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி கல்வி!

கல்வித்துறையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் குடியரசுத் தலைவர் கவலை தெரிவித்தார். தனது காலத்தில் அனைத்து சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களும் ஒரே பள்ளியில் படிக்கவும், விளையாடவும், ஒன்றாகப் பழகவும் வாய்ப்பு இருந்ததாகக் குறிப்பிட்டார். ஆனால், தற்போது வசதி படைத்தவர்கள் தங்களது குழந்தைகளைத் தரமான தனியார் பள்ளிகளில் சேர்க்கும் நிலையில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிக்கும் சூழல் நிலவுவதாகத் தெரிவித்தார்.

குழந்தைகள் ஏழைகள் அல்ல; அவர்களின் பெற்றோர்கள்தான் ஏழைகள். நான் ஏழை, அதனால் நல்ல பள்ளியில் படிக்க முடியாது என்ற எண்ணம் குழந்தைகளிடம் உருவாகக் கூடாது என்றும் கூறினார். நாட்டின் எதிர்காலம் குழந்தைகளின் கைகளில் இருப்பதால், அனைத்து குழந்தைகளுக்கும் சமமான அடிப்படையில் கல்வி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், சட்டத்துறையில் சிறந்து விளங்கும் மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்றும், திறமையுடன் மனிதநேயத்தையும், சிறப்புடன் இரக்க குணத்தையும் இணைத்துச் செயல்பட அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சட்டக் கல்வியில் மனிதநேயத்திற்கும் முக்கியத்துவம்!

சட்டப் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் பாடத்திட்டங்களில் சட்டப் பயிற்சிக்கு இணையாக மனிதநேயம் மற்றும் நெறிமுறைகளுக்கும் (Empathy and Ethics) முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார். மேலும், நாட்டின் ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இலவச சட்ட உதவிகளைப் பயன்படுத்தி அவர்கள் நீதியை எளிதாக அணுகுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

‘மக்களின் நீதிமன்றமாக’ மாறிய உச்ச நீதிமன்றம்!

இந்த நிகழ்ச்சியில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், முன்பு ஒரு சிலரால் மட்டுமே அணுக முடியும் என்ற நிலை இருந்த உச்ச நீதிமன்றம், தற்போது ‘மக்களின் நீதிமன்றமாக’ (People’s Court) மாறியுள்ளதாகத் தெரிவித்தார். சிறிய நகரங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்களும், புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் ஒரே விதமான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

நீதிமன்றத்தை அணுகுவதற்கான வாய்ப்பு ஒருவரின் அந்தஸ்தைப் பொறுத்து அமையாமல், முறையான நடைமுறைகளைப் பொறுத்தே அமைகிறது என்றும் தெரிவித்தார். நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் தனிச்சலுகைகளுக்கு இடமில்லை என்றும் கூறினார். மேலும், அரசியலமைப்புச் சபையில் 1946-ம் ஆண்டு ஹன்சா மேத்தா ஆற்றிய உரையை மேற்கோள் காட்டிய தலைமை நீதிபதி, சலுகைகளுக்கும் நீதிக்கும் இடையிலான வேறுபாட்டை விளக்கினார். அரசியலமைப்பு என்பது ஒரு சிலருக்கான சலுகை ஆவணம் அல்ல; ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி வழங்குவதற்கான உறுதிமொழி என்று குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.