மக்களவைத் தேர்தல் | இன்று மாலை பிரச்சாரத்தை தொடங்குகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!

உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து டெல்லி திஹார்  சிறையில் இருந்து வெளியே வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில்…

உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து டெல்லி திஹார்  சிறையில் இருந்து வெளியே வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார்.  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  இதனிடையே, தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக இடைக்கால ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.  கடந்த மே 7-ம் தேதி இதுகுறித்து விசாரணை நடைபெற்றது.  அப்போது,  இடைக்கால ஜாமின் வழங்கினால் அரசு தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட முடியாது என உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் தெரிவித்தது. அதற்கு அவர்களும் கையெழுத்திட மாட்டார் என உறுதியளித்தனர்.

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை 44 பக்க பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றம் தாக்கல் செய்தது.  அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்குவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்காமல் விசாரணையை ஒத்தி வைத்தது.  தொடர்ந்து,  இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜூன் 1-ம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கண்ணா,  தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.  மேலும் ஜூன் 2-ம் தேதி ஆஜராகும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் டெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 25-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.  இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார்,  முன்னதாக கனாட்பிளேஸில் உள்ள ஹனுமான் கோயிலுக்குச் சென்றார்.   பின்னர் பிற்பகல் 1 மணியளவில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

இதனைத் தொடர்ந்து,  அவர் இன்று மாலை 5.30 மணியளவில் தெற்கு டெல்லியில் நடைபெறும் தேர்தல் பிரசார பேரணியில் பங்கேற்று ஆம் ஆத்மி மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.