ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், காய்கறி கடையில் காய்கறி விற்றும், தேநீர் கடையில் தேநீர் போட்டும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் , அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுகியில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூரம்பட்டி,ஜெகநாதபுரம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே சுதீஷ், தங்களது கட்சி வேட்பாளரான ஆனந்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது காய்கறி கடைக்கு சென்று, அங்கு பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக காய்கறி விற்பனையில் ஈடுபட்டும், தேநீர் கடையில் தேநீர் போட்டும் நூதன வாக்கு சேகரிப்பில் ஈடுபாட்டார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய எல்.கே.சுதீஷ், இன்று 4 வார்டுகளில் தொண்டர்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், ஆளும் கட்சி,ஆண்ட கட்சிகள் கொடுத்த பிரியாணி, மது பாட்டில்கள் சாலையில் கிடப்பதாகவும், இதை அப்புறப்படுத்திய எங்கள் வேட்பாளருக்கு பொதுமக்கள் வரவேற்பு கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், மேயர்,கவுன்சிலர்கள் என ஒட்டு மொத்த கூட்டமும் இங்கு தான் முகாமிட்டு உள்ளனர்.இவர்கள் இந்த பகுதி பெண்களுக்கு 500 ரூபாயும், ஆண்களுக்கு 1000 ரூபாயுமாக பண பட்டுவாடா செய்கின்றனர். ஆனால் தேர்தல் ஆணையம் இதையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை.
இதுவரை திமுகவினர் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்ற வில்லை. ஆனால் 80 சதவீத பணிகளை முடித்து விட்டதாக மார்தட்டிக் கொள்கிறார்கள். இவற்றிற்கெல்லாம் நிச்சயம் இந்த தேர்தலில் மக்கள் நல்ல படம் புகட்டுவார்கள்.
ஈரோடு கிழக்கில் நிற்கும் எங்களது வேட்பாளர் வெற்றிபெற்றால் நிச்சயம் இந்த பகுதி மக்களின் பிரச்னைகளை தீர்த்து வைப்பார். இந்த தேர்தல் நிச்சயம் எங்களுக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்கும் என்று எல்.கே சுதீஷ் தெரிவித்துள்ளார்.
- பி. ஜேம்ஸ் லிசா











