20 ஆண்டுகளுக்குப் பின் ரவுடிக்கு ஆயுள் தண்டனை!

சென்னை வளசரவாக்கத்தில் முன்விரோதம் காரணமாக பால் வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடிக்கு 20 ஆண்டுகளுக்குப் பின் பூந்தமல்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. வளசரவாக்கம் ஆழ்வார்திருநகர் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (35),…

சென்னை வளசரவாக்கத்தில் முன்விரோதம் காரணமாக பால் வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடிக்கு 20 ஆண்டுகளுக்குப் பின் பூந்தமல்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

வளசரவாக்கம் ஆழ்வார்திருநகர் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (35), பால் வியாபாரியான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கோபி (என்ற)கர்ணா(48), என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 8-3-2003 அன்று கோபி வளசரவாக்கம், ராமகிருஷ்ணா நகர் பகுதியில் தட்சிணாமூர்த்தியை ஓட ஓட விரட்டி சென்று வெட்டி கொலை செய்தார். இந்த கொலை வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் கோபியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கோபி மீது கொலை, மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் ஜாமீனில் வெளியே
வந்த கோபி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார்.

14 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு திருவண்ணாமலை பகுதியில் வைத்து வளசரவாக்கம் போலீசார் கோபியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு
பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி முருகேசன் கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கோபிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தைக் கட்ட தவறினால்,  ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் முக்கிய சாட்சியான கொலை செய்யப்பட்ட தட்சிணாமூர்த்தியின் மகன் ராமநாதன் பக்ரைனில் இருந்ததால், வழக்கை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அரசு செலவில் பக்ரைனில் இருந்து வந்து அவர் அளித்த சாட்சியத்தை அடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

—-கா..ரூபி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.