ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை எதிரொலி காரணமாக கடந்த சில வாரங்களாகவே மிகப்பெரிய சிக்கலை சந்தித்து வந்த அதானிக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, அதானி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் பங்கு விலைகளும் கிட்டத்தட்ட 5 சதவீதம் வரை சரிவடைந்து மிக பெரிய சறுக்கலை சந்தித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பெர்க் என்ற நிறுவனம், அதானி குழுமம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த மாதம் 25-ம் தேதி வெளியிட்டது. அதில், அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் நிதிநிலை அறிக்கையில் தவறாக தகவல்களை அளித்து பங்குச் சந்தைகளில் ஆதாயத்தைத் தேடுவதாக குற்றம்சாட்டியது. இதனைத் தொடர்ந்து, அதானி குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் அனைத்து பங்குகளும்,
பங்குசந்தைகளில் கடும் சரிவை சந்தித்தன. குழுமத்தின் நன்மதிப்பைப் பாதுகாக்கும் பொருட்டு, நிலுவையில் இருந்த கடன்களை அதானி குழுமம் திருப்பிச் செலுத்திய போதிலும், அதனால் பங்குகளின் வீழ்ச்சியை தடுக்க முடியவில்லை.
குறிப்பாக, அதானி டிரான்ஸ்மிசன், அதானி டோட்டல் கியாஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி என்டர்பிரைசஸ், அதானி பவர், அம்புஜா சிமென்ட்ஸ் போன்றவைகளின் பங்குகள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. அதன்படி, தற்போது அதானி என்டர்பிரைசஸ் பங்கு ரூ.114 குறைந்து ரூ.1,202 ஆகவும், அதானி கிரீன் எனர்ஜி பங்கு ரூ.24.30 குறைந்து ரூ.462.20 ஆகவும், அதானி பவர் பங்கு ரூ.7.30 சரிந்து ரூ.139.35 ஆகவும் வர்த்தகமாகி வருகிறதாம். மேலும் அதானி டோட்டல் கேஸ் பங்கு ரூ.37.55 குறைந்து ரூ.714.25 ஆகவும், அதானி டிரான்ஸ்மிசன் பங்கு ரூ.35.60 சரிந்து ரூ.676.70 ஆகவும், அதானி வில்மர் பங்கு ரூ.18 சரிந்து ரூ.344.45 ஆகவும், அம்புஜா சிமென்ட்ஸ் பங்கு ரூ.14 சரிந்து ரூ.331 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.
Also Read : பிரதமரின் சகோதரர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
இது தவிர, அதானி குழுமத்தைச் சேர்ந்த ஏ.சி.சி பங்கு ரூ.52.25 குறைந்து ரூ.1,677க்கு விற்பனையாகி வருவதோடு, அதானி குழும நிறுவனங்களில் எல்ஐசியின் பங்கு மதிப்பு ரூ.30,127 கோடியை விட மேலும் சரிந்துள்ளது. இதில் ஆறுதல் தரும் வகையில் அதானி துறைமுகங்கள் மட்டுமே பங்கு சந்தையில் பச்சை நிறத்தில் உள்ளனவாம். இந்த
சாறுகளின் காரணமாக, கவுதம் அதானி கடந்த ஒரு மாதத்தில் தனது சொத்து மதிப்பில் கிட்டத்தட்ட 80 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். இதனால் தற்போது அவரது மொத்த சொத்து மதிப்பு 39.9 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. ஏறக்குறைய இதே அளவிலான சொத்து மதிப்பைத்தான் அதானி கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதானி கொண்டிருந்தார். இதன் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத சரிவை அதானி சந்தித்துள்ளதோடு, 52 வாரங்களில் இல்லாத வகையில் பங்கு சந்தையில் மிகப்பெரிய வீழ்ச்சியையும் இந்நிறுவனம் சந்தித்துள்ளது.
- பி. ஜேம்ஸ் லிசா









