தமிழ்நாட்டில் ஒன்பது மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால்தான் மின் தடை ஏற்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை அண்ணா சலையில் உள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் நுகர்வோர் சேவை மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது;
“மின் நுகர்வோர் கட்டணம் செலுத்த மூன்று வாய்ப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். இதுவரை 10 லட்சம் பேர் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி மின் கட்டணம் செலுத்தி உள்ளனர். தமிழக மின் வாரியத்துக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இந்த கடன்களில் இருந்து மின்வாரியத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த 9 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால்தான் அவ்வப்போது மின் தடை ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முன்னாள் மின் துறை அமைச்சர் தங்கமணி தொகுதியிலும் இப்போது மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஏன் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை என்பதற்கு மின் துறைக்குப் பொறுப்பு வகித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி பதில் சொல்ல வேண்டும்.”
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.