விவசாயிகளை கார் ஏற்றிக் கொன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் இருந்து, மத்திய உள்துறை இணை அமைச்சரின் மகனை விடுவிக்க லக்கிம்பூர் மாவட்ட நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் அவர் மீது நீதிமன்றத்தில் நாளை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி, மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, லக்கிம்பூரில் நான்கு விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் மீது, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, மஹிந்திரா காரை ஏற்றியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் விவசாயிகள் உள்ளிட்ட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் பரவியதை அடுத்து, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த சம்பவம் நடைபெற்று, பல நாட்களுக்குப் பின்னரே மத்திய அமைச்சரின் மகனான ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.
காவல்துறையும் நிர்வாகமும் விசாரணையில் மெதுவாகச் செல்வதாகக் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் தலைமையிலான ஒரு குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, ஆஷிஷ் மிஸ்ரா லக்கிம்பூர் கேரி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி லக்ஷ்மி காந்த், வழக்கில் இருந்து ஆஷிஷ் மிஸ்ராவை விடுவிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து அவர் மீதும், ஏனைய குற்றவாளிகள் மீதும் நீதிமன்றத்தில், நாளை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதி லக்ஷ்மி காந்த் தெரிவித்துள்ளார்.