முதல்வர் ஸ்டாலின் நன்றாகத் தூங்கட்டும் அவரது கட்சி நிருவாகிகள் அவரை தூங்கவிட்டால், விழித்திருக்கும் நேரத்தில் நடக்கும் உண்மையை அவர் எதிர்கொள்வார் என முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பேசினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவேந்தல் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் சட்ட மன்ற தொகுதியை சேர்ந்த நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அதை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றவில்லை. இது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்படும் என்று ஏற்கனவே ஜெயலலிதா அறிவித்தார். பழனிசாமி அதற்காக தீர்மானமும் நிறைவேற்றினார். அதை இந்த அரசு மறந்துவிட்டது என பேசினார்.
மேலும், தற்போது அதே அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அது எப்போது கிடைக்கும் என தெரியவில்லை முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் பயனாளிகள் எண்ணிக்கையை 37 லட்சமாக உயர்த்தியது அதிமுக அரசு. ஆனால், திமுக ஆட்சியில் அதை சரிபாதியாகக் குறைத்துவிட்டது. சொத்துவரி, மின்கட்டண உயர்வைக் கண்டித்துத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளன என்றார்.
அத்துடன், தமிழகத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தும் திறன் கொண்டது. அதிமுக திமுக ஆட்சிக்கு வந்து 18 மாதங்களில் விருதுநகருக்கு எந்த புதிய திட்டமும் கொண்டுவரப்படவில்லை. இது போன்ற பிரச்சனை தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதியிலும் உள்ளது. இது வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், அதைத்தொடர்ந்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என கூறினார்.
மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் தூங்குவது இல்லை எனவும் அவரை கட்சி நிர்வாகிகள் தூங்கவிடுவதில்லை என்று அவரே கூறினார் இதன் காரணமாக விழுத்திருக்கும் நேரத்தில் அவருக்கு உண்மைகள் தெரியவருவதில்லை. முதல்வரைத் தூங்க விட வேண்டும் அப்பொழுதுதான் அவர் விழித்திருக்கும் நேரத்தில் நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரிந்து கொள்ள முடியும் என பேசினார்,
அத்துடன், கடந்த 18 மாதங்களில் 2,232 கொலைகள் நடந்துள்ளன. ஒரு நாளைக்கு 4 கொலை நடப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது. இப்படியிருக்கச் சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளதாகக் கூறுவது என்ன நியாயம். கஞ்சா தலைநகரமாகத் தமிழ்நாடு மாறிவிட்டதாக டிஜிபியே கூறுகிறார். குட்கா விற்பனை தமிழகத்தில் 2 மடங்காக உயர்ந்து விட்டது என்றார்.
மேலும், முதல்வர் ஸ்டாலின் நன்றாகத் தூங்கட்டும் அவரது கட்சி நிருவாகிகள் அவரை தூங்கவிட்டால், விழித்திருக்கும் நேரத்தில் நடக்கும் உண்மையை அவர் எதிர்கொள்வார் என்று நான் நம்புகிறேன் என்றார். அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் போக்கில் ஈடுபடுவதற்குக் காரணம் சரியான தலைமை இல்லாததே காரணம். இந்த அரசு லஞ்சம் லாவண்யத்தின் உச்ச கட்டம் இந்த அரசுதான் என விருதுநகரில் முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பேட்டி அளித்தார்.







