விஜய் மீது எனக்கு பொறாமையா…? – நடிகர் ரஜினிகாந்த் பேட்டி…!

விஜய் முதலமைச்சராவதில் தனக்கு எந்தப் பொறாமையும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தமிழ் நாடு சட்டமன்றதேர்தலில் தவெக 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியமைக்க பெரும்பன்மை இல்லாமல் இருந்து. அப்போது திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முயற்சித்ததாகவும் இதற்காக நடிகர் ரஜினிகாந்த் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் பரவின.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது ;

தேர்தல் தொடர்பாக என் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதாலேயே, நான் இந்தச் செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறேன். அந்த விமர்சனங்களுக்கு நான் பதிலளிக்காமல் போனால், அவை உண்மையாகிவிடும்.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, நான் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தேன். அதுவே விமர்சனத்திற்குரிய ஒரு பொருளாக மாறியது. எங்கள் நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்ததைக் கண்டு நான் வருத்தமடைந்தேன்.

முதலமைச்சராக விஜய் ஆகக் கூடாது என தடுக்க ரஜினி முயன்றார். இரு பெரிய கட்சிகளுக்காக கூட்டணிக்கு பேசினார் என்றெல்லாம் விமர்சிக்கிறார்கள். அப்படி பேசக்கூடிய தரம்கெட்ட ஆள் இந்த ரஜினிகாந்த் இல்லை.

விஜய் முதலமைச்சராவதில் எனக்கு எந்தப் பொறாமையும் இல்லை. எனக்கும் விஜய்க்கும் 28 வயது வித்தியாசம் உள்ளது. விஜய் மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.