2 ஜி வழக்கில் சோதனை நடந்த போது மவுனம் காத்தது ஏன்? -குஷ்பு கேள்வி

2ஜி அலைக்கற்றை வழக்கில் நடைபெற்ற சோதனையின் போது முதலமைச்சர் ஸ்டாலின் மவுனம் காத்தது ஏன் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக ஆட்சியின் 9 ஆண்டு கால சாதனை…

2ஜி அலைக்கற்றை வழக்கில் நடைபெற்ற சோதனையின் போது முதலமைச்சர் ஸ்டாலின் மவுனம் காத்தது ஏன் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக ஆட்சியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவொற்றியூர்
நெடுஞ்சாலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு பேசியதாவது: “திமுகவினர் பல குற்றச்சாட்டுகளை சுமத்தினாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாஜகதான் காரணம் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். நாடும் வளர்ந்து நாமும் வளர்வதே சிறந்த வளர்ச்சி. ஆனால் காஙகிரஸ், திமுக ஆட்சியில் நாமும் வளரவில்லை, நாடும் வளரவில்லை. கடந்த 9 ஆண்டுகளில் சுமார் ரூ.2.75 லட்சம் கோடி திட்டத்தை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நடிப்பு முன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கூட தோற்று விடுவார். இதயத்தில் பிரச்னை இருந்தது இத்தனை நாட்களாக தெரியாதா? செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்படுவதன் மூலம் ஓமந்தூரார் மருத்துவமனையில் மருத்துவம் சரியில்லை என்பதை அரசு ஒத்துக்கொள்கிறதா? அல்லது காவேரி மருத்துவமனைக்கு சென்றால் தங்களுக்கு வேண்டப்பட்ட மருத்துவர்கள்
மூலம் மருத்துவ அறிக்கையை மாற்றி கொள்ளவா” என குஷ்பு கேள்வி எழுப்பினார்.

“காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி வழக்கில் முதலமைச்சரின் தாயாரை விசாரணை நடத்திய போது மவுனம் காத்தது ஏன்? செந்தில்பாலாஜி மீது உள்ள அக்கறையால் அமைச்சர்கள் அவரை பார்க்க செல்லவில்லை. தங்களின் பெயர்களை கூறிவிட கூடாது என அனைவரும் சென்று பார்த்து வருகிறார்கள். ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜியை சிறைக்கு அனுப்புவோம் என ஸ்டாலின் 2014 வாக்குறுதி அளித்த நிலையில், அதை 2021இல் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் கைது செய்யப்பட்ட போது ஏதும் பேசாத திமுகவினர், பாஜக
ஆட்சியில் அமைச்சர் கைது செய்யப்பட்டபிறகு பழி வாங்கும் செயல் என
கூறிவருகின்றனர். வடிவேலு தன்னை”தானே ரவுடி தான் என்று கூறி கொள்வதை போல முதல்வர் தன்னை தானே சிறந்த முதல்வர் நம்பர் 1 முதல்வர் என கூறி கொள்கிறார். இரண்டு ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ள திமுகவினர் 7 தலைமுறைக்குஅல்ல 70 தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்துள்ளனர்.
பிரதமரை பார்த்து ஏதேனும் ஊழல் செய்துள்ளார் என கூறமுடியுமா?

தாய் மொழியில் நீட் தேர்வு எழுதலாம் என்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் மனநிலைபாதிக்கப்படும் செயல்களில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து மூன்று மாணவர்கள் தேசிய அளவில் குறிப்பிடத்தக்க இடங்களை பிடித்துள்ளனர். அண்ணாமலையை பார்த்து தான் முதலமைச்சர் தூக்கம் வரவில்லை என கூறுகிறார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லாத நிலையில், தமிழ்நாட்டிற்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் செயல்படுத்தியுள்ளார்.

தமிழ், தமிழ் என்று சொல்லி ஏமாற்றும் திமுக, தமிழுக்காக என்ன செய்தது என்றும் உலகின் எந்த மூளைக்கு சென்றாலும் பிரதமர் தமிழ் பேசி பெருமைப்படுத்துகிறார் என்றும் நாடாளுமன்றத்தில் செங்கோல் கொடுத்து தமிழ்நாட்டை பெருமைப்படுத்தியவர் பிரதம்ர் மோடி” என கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு கூறியதாவது: “அமைச்சரின் உயிரை காப்பற்ற வேண்டுமென அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், சராசரி மக்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டாலும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்பாரா? இதன் மூலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சரி இல்லை என்பதை அவர் ஒப்பு கொள்கிறாரா?

அமலாக்கத்துறையின் இன்றைய நடவடிக்கைகள் பழிவாங்கும் செயல் என்றால் 2011ஆம்
ஆண்டு 2 ஜி வழக்கில் முதல்வரின் தாயாரை அமலாக்கத்துறையினர் விசாரிக்கும் போது
அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் பழிவாங்கும் செயலாக
தெரியவில்லையா? அப்போது மௌனம் காத்தது ஏன் என கேள்வி எழுப்பினார். உள்துறை அமித்ஷா அதிமுக பாஜக கூட்டணி தொடர்வதாக கூறியுள்ளார் எனவும் குஷ்பு கூறினார்.

இதனைத்தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமர்பிரசாத் ரெட்டி
பேசியதாவது, “அண்ணாமலை மீது வழக்கு தொடுத்த டிஆர்பாலு தான், அடுத்து சிறைக்கு செல்ல இருப்பவர்.அவர் சிறை செல்வது உறுதி. தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் திமுக 4 சிறைகளை வைத்து கொண்டு மிரட்டும் வகையில் செயல்பட்டால் , நாடு முழுவதும் ஆட்சி செய்து வரும் பாஜக நினைத்தால் 1500 சிறைகளில் எந்த சிறையில் வேண்டுமானாலும் அடைக்க முடியும்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.