கேரளாவில் பழங்குடியின இளைஞர் மது என்பவரை கொலை செய்த வழக்கில் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் 14 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு, கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே பழங்குடியின இளைஞர் மது என்பவர் உணவு திருடியதாக குற்றம்சாட்டி, ஒரு கும்பல் கட்டி வைத்து தாக்குதல் நடத்தியது. பிறகு அந்த இளைஞரை போலீசாரிடம் அந்த கும்பல் ஒப்படைத்தனர். போலீசார் அவரை காவல்நிலையம் அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதை அடுத்து பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்தனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் 16 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படியுங்கள் : கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் ஒபெக் நாடுகள் – பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!!
இந்த வழக்கு மன்னார்காடு சிறப்பு நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த வழக்கில் நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், வழக்கில் தொடர்புடைய 16 பேரில், 14 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். மேலும் 14 பேரின் தண்டனைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.







