காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தினை மத்தியில் ஆளும் பாஜகவினர் விளம்பரபடுத்தியதுபோல் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தினையும் விளம்பரபடுத்த திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்துடன் நெஞ்சுக்கு நீதியை இணைத்து பேச வேண்டியது ஏன், என்பது குறித்து விவரிக்கிறது இந்த கட்டுரை.
காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் காஷ்மீரிலுள்ள பண்டிட்கள் தீவிரவாத அமைப்புகளால் எவ்வாறு சித்தரவதை அனுபவித்தார்கள். அவர்கள் ஏன் அங்கிருந்து வெளியேறினார்கள். அவர்கள் அதிகளவில் அங்கு கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை விவரிப்பதாக இருந்தது. அதேபோல் நெஞ்சுக்கு நீதி திரைப்படம், இந்தியில் வெளியான ஆர்டிகல் 15 என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இது வட இந்தியாவில் தலித் பெண் குழந்தைகள் எப்படி கொல்லப்பட்டார்கள். அந்த வழக்கினை காவல்துறை எப்படி மூடி மறைத்தது. அதனை படத்தின் ஹீரோவாக வலம் வரும் உதயநிதி மீண்டும் மீள் விசாரணை மேற்கொண்டது எப்படி என்பதை விவரிப்பதாக உள்ளதாம். நெஞ்சுக்கு நீதி , அப்படியே உத்தர பிரதேசத்தை மையப்படுத்தாமல், தமிழக களத்திற்கு ஏற்றாற்போல், தமிழ் ஆடியன்ஸ்க்கு பிடித்த மாதிரி படம் எடுத்து இருக்கிறார்களாம். இந்த படம் முழுக்க, முழுக்க சமூக நீதி பற்றி பேசினாலும், ஒரு த்ரில்லர் மூவி போல் கதைகளம் நகருமாம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதல் முறையாக போலீஸ் கெட்டப்பில் நடித்திருக்கும் உதயநிதி, சாதிய எதிர்ப்பு, சமூக நீதி, பெண் விடுதலை என பல்வேறு விஷயங்கள் குறித்து இத்திரைப்படத்தில் பேசியுள்ளார். இந்த கதை சமூக நீதி பேசுவதால் தமிழகத்திற்கு ரொம்பவே நெருக்கமாக இருக்கும் என்பது திரைப்பட குழுவினரின் எண்ணமாக உள்ளது.
இது வழக்கமான போலீஸ் படமாக இல்லாமல், காவல்துறையில் சமூகநீதியின் பங்கு எப்படி உள்ளது. இதனை ஒரு அதிகாரியாக உதயநிதி எப்படி கையாளுகிறார் என்பதே எனத் தெரிகிறது. இந்த படத்தின் தலைப்பே திமுக தலைவர் கருணாநிதியின் சுய வரலாற்று புத்தகமான நெஞ்சுக்கு நீதி என்பதன் தலைப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக திமுக தலைவரும், முதலமைச்சருமான முக ஸ்டாலினிடம் அனுமதி கேட்டபோது, சற்று யோசித்தாராம். பின்னர் கதையை கேட்ட பின்னர் யோசிக்காமல் உடனே ஓகே சொன்னாராம்.
இந்த படம் உதயநிதியின் அரசியல் வாழ்க்கைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதால், பாஜகவினர் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை புரமோட் செய்தது போல், இதனை பிரபலபடுத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் விரும்பியதாக தெரிகிறது. அதனையடுத்து, இளைஞரணி அந்த பணியை கனகச்சித்தமாக மேற்கொள்ளும் எனத்தெரிகிறது.
இராமானுஜம்.கி