15வது ஐபிஎல் சீசன் நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் இந்த சீசனிலும் பல புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன.
நேற்று (மே 16) நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் டெல்லி அணியும், பஞ்சாப் அணியும் மோதின.
இதில் டெல்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 ஆவது விக்கெட்டை கைப்பற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
யார் இந்த அக்சர் படேல்?
குஜராத் மாநிலம் நதியாட் நகரில் 1994ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி பிறந்தவர் அக்சர் படேல். ஆல்-ரவுண்டரான இவர், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆவார். குஜராத் அணிக்காக முதலில் விளையாடிய அக்சர் படேல், மும்பை இந்தியன்ஸ் அணியில் 2013-ஆம் ஆண்டு இடம்பிடித்தார்.
எனினும், அவருக்கு அந்த சீசனில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து, 2014-இல் பஞ்சாப் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் 17 விக்கெட்டுகளை கைப்பற்றி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அதைத் தொடர்ந்து அடுத்த ஐபிஎல் சீசனிலும் (2015ஆம் ஆண்டு) பஞ்சாப் அணியிலேயே அவர் தக்க வைக்கப்பட்டார்.
அந்த சீசனில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், கடைசி பேட்டிங் வரிசையில் களமிறங்கி 206 ரன்களையும் அவர் பதிவு செய்தார். 2016-இல் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஓர் ஆட்டத்தில் 4 பந்துகளுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றி தனது திறமையை வெளிப்படுத்தினார். அதைத் தொடர்ந்து 2018-ஆம் ஆண்டிலும் அக்சர் படேலை பஞ்சாப் அணி தக்க வைத்தது. 2019 ஐபிஎல் தொடரில் டெல்லி அணி இவரை ஏலத்தில் எடுத்தது. 2021 தொடரிலும் டெல்லி அணி அக்சரை தக்க வைத்தது.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 1,000 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர் என்ற சாதனையுடன், 100 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் அக்சர் படைத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் ஆவார்.
சிஎஸ்கே வீரர் பிராவோ, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரேன் ஆகியோரும் இந்தச் சாதனையை புரிந்துள்ளனர். மேலும் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 100 விக்கெட்டுகளைப் பதிவு செய்த பந்துவீச்சாளர்களின் வரிசையில் அக்சர் 17-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 9ஆவது சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் அக்சர் படைத்தார். டெல்லி அணி நிர்வாகமும், கிரிக்கெட் ரசிகர்களும் அக்சர் படேலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டெல்லி அணியின் வெற்றிக்கு துணையாக இருந்துவரும் 28 வயது அக்சர் படேல் மேலும் பல சாதனைகளை படைக்க நாமும் வாழ்த்துவோம்!