கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயில் ஆடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த மகாதானபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீமகாலட்சுமி அம்மன் திருக்கோயில். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம் 18ம் தேதியன்று திருவிழா நடைபெறுவது வழக்கமாகும்.
அதன்படி இந்தாண்டு திருவிழா வெகுவிமர்சையாக நடந்தேறியது. கோயில் திருவிழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடங்கள் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மேலும் முன்னூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.







