அதிமுகவில் மீண்டும் இணைந்தார் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மீண்டும் அக் கட்சியில் இணைந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிராக அன்வர் ராஜா பேசி…

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மீண்டும் அக் கட்சியில் இணைந்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிராக அன்வர் ராஜா பேசி வந்தார். இதனால் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சசிகலாவுக்கு ஆதரவாக அவர் பேட்டியளித்த நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் அன்வர் ராஜா மீண்டும் தன்னை இன்று இணைத்துக் கொண்டார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :

“எம்ஜிஆர் கட்சி தொடங்கியது முதல் பல பொறுப்புகளில் இருந்து வந்துள்ளேன், மாவட்ட செயலாளர், அமைப்புச் செயலாளர் அதிமுக ஆட்சி மன்றக் குழு தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளேன். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சர் பதவி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வழங்கினார். சிறிய சறுக்கல் ஏற்பட்டது. இன்று மீண்டும் அதிமுக பொதுச் செயலாளரை சந்தித்து இணைந்துள்ளேன். ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை வேறு. கூட்டணி வேறு.

இயக்கத்தின் சட்ட திட்டங்கள் குறித்து எனக்கு தெரியும். அதற்கு கட்டுப்பட்டு இயக்கத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவேன் என உறுதி அளிக்கிறேன். ஒரு கட்சி எதிர்க்கட்சியை விமர்சிப்பது வேறு. கூட்டணி என்பது வேறு. இன்றைய பாஜக தலைவர் அதிமுகவை விமர்சிக்கிறார். ஆனால் கூட்டணி பற்றி முடிவெடுக்க வேண்டியது அந்த கட்சியின் தலைவர்கள் தான், காங்கிரசை தவிர எல்லா கட்சியும் பாஜகவோடு கூட்டணி வைத்துள்ளன.

சுமார் 4 ஆண்டுகள் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்திருந்தது. பாஜக ஆட்சியில் திமுக இடம் பெற்றது, இலகா இல்லாத அமைச்சராக முரசொலி மாறன் ஒன்றரை ஆண்டுகள் இருந்தார், முரசொலி மாறன் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக அன்றைய பிரதமர் வாஜ்பாய், ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வந்திருந்தனர். அப்படி அவர்கள் பின்னிப் பிணைந்து கூட்டணியில் இருந்தார்கள். நாங்கள் அப்படி இல்லை, எங்கள் கொள்கைக்கு ஏதாவது இடர்பாடுகள் ஏற்படுமானால் உடனடியாக எந்த கூட்டணியாக இருந்தாலும் அதிலிருந்து விலக அதிமுக என்றும் தயங்கியது இல்லை” என அன்வர் ராஜா தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.