கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் நடிகரும் தவெக தலைவர் விஜயை இருமுறை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக கடந்த 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
விஜய் தரப்பில், சட்டமன்ற தேர்தலையொட்டி வேட்பாளர் நேர்க்காணல் உள்ளிட்ட பணிகள் இருப்பதால் 15 நாட்கள் கால அவகாசமும் டெல்லிக்கு பதிலாக சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராக அனுமதி அளிக்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் விஜயின் கோரிக்கையை மறுத்த சிபிஐ, 15-ந்தேதி (இன்று) விசாரணைக்காக டெல்லிக்கு வருமாறு சம்மன் அனுப்பினர்.
அதன் படி தனி விமானம் மூலமாக டெல்லி சென்ற விஜய் இன்று காலை சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். தொடர்ந்து அவரிடம் காலை 10.30 மணி முதல் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை மாலை 5.30 மணி வரை நடைபெற்றது.
விசாரணை நிறைவுற்றதை தொடர்ந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து காரில் நின்ற படி வெளியே வந்த தவெக தலைவர் விஜய் கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை நோக்கி கையசைத்த படி அங்கிருந்து புறப்பட்டார்.






