’வெஞ்சன்ஸ்’ முதல் ’மேட் இன் கொரியா’ வரை – இந்த வாரம் வெளியான படங்களின் மினி விமர்சனம்…….!

இந்த வாரம் வெளியான திரைப்படங்களின் மினி விமரசனத்தை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

கோலிவுட்டில் இந்த வாரம் யோகிபாபு நடித்த ’கெணத்த காணோம்’, அபர்ணதியின் ’வெஞ்சென்ஸ்’, கலையரசனின் ’கொலைச்சேவல்’, காதல் சுகுமாரின் ’போலீஸ் பேமிலி’, கயல் வின்சென்ட் நடித்த ’அந்தோணி’, புதுமுகங்கள் நடித்த ’வெளவல்ஸ் ’, பிரியங்காமோகனின் ’மேட் இன் கொரியா’ (ஓடிடி) ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ உங்களுக்காக………..!

கெணத்த காணோம்

சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகிபாபு, லவ்லின், ரேச்சல், விக்ரமாதித்யன் உட்பட பலர் நடித்த கிராமத்து பின்னணியிலான படம் தான் ’கெணத்த காணோம்’. சமூக அக்கறை கொண்ட படத்தை காமெடி கலந்து கொடுத்து இருப்பது சிறப்பு.

ராமநாதபுரம் மாவட்டம் கோடங்கிபட்டி கிராம மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் தவிக்கிறார்கள். ஊர் மக்கள் ஒன்றிணைந்து தண்ணீருக்காக கிணறு தோண்டும்போது, அங்கே டைனோசர் எலும்பு கூடு கிடைக்க, தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்கு கிராமம் வருகிறது. அவர்கள் கிராம மக்களை காலி செய்துவிட்டு அங்கே ஆராய்ச்சி செய்ய நினைக்கின்றனர். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் இப்படத்தின் கதை.

கதைநாயகனாக அழுத்தமான கேரக்டரில் நடித்து இருக்கிறார் யோகிபாபு. கோயில் பூசாரியாக வரும் அவரின் நடிப்பு, ஒன்லைன் பஞ்ச் ரசிக்க வைக்கிறது. கிளைமாக்சில் தனக்கே உரிய காமெடி ஸ்டைலில், மொட்டை ராஜேந்திரனுடன் இணைந்து சிரிக்க வைத்து இருக்கிறார். ஹோம்லியான வேடத்தில் வருகிறார் லவ்லின். தொல்லியல்துறை அதிகாரியாக சற்றே நெகட்டிவ் கேரக்டரில் நடித்து இருக்கிறார் ரேச்சல். கிராமமக்களின் இயல்பான நடிப்பு, கிண்டல், கேலி உள்ள தாத்தாவாக வரும் விக்ரமாதித்யனின் நடிப்பு, பஞ்சாயத்து தலைவரின் ஆசை ஆகியவை படத்தின் பலம்.

தண்ணீர் பஞ்ச காட்சிகள், டைனோசர் எலும்பு கூட்டால் கிராம மக்கள் தத்தளிக்கும் காட்சிகள், போலீசாரின் அடக்குமுறை, எலும்பு காணாமல் போவது, கிளைமாக்ஸ் ஆகியவை பரபரப்பாக இருக்கிறது. இப்படி கிராமத்து பின்னணியில், காமெடி, பிரச்னைகள் கலந்த படம் பார்த்து ரொம்ப நாளாச்சு.

தண்ணீர்பஞ்சம், அரசியல், ஆன்மிகம் என பல விஷயங்களை சட்டயர் கலந்து சொல்லியிருப்பதும், கிராமத்து மக்களின் பிரச்னைகளை சினிமாத்தனம் இல்லாமல் காண்பித்து இருப்பதும் படத்தை ரசிக்க வைக்கிறது. படத்தை இயக்கிய சுரேஷ்சங்கையா மறைந்துவிட்டாலும் அவரின் திறமை, சமூக ஆர்வம், காமெடி சென்சை நினைத்து பார்த்து பாராட்ட வேண்டியதுள்ளது. இன்னும் கொஞ்சம் காமெடி, முதற்பாதியில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு இருந்தால் படம் பெரிய ஹிட்டாகி இருக்கும்.

போலீஸ் பேமிலி

தனது மகனை கொன்ற போலீஸ்காரர்களின் குடும்பத்தை துரத்தி, துரத்தி கொல்கிறார் வில்லன் பருத்திவீரன் சரவணன். அந்த பையன் யார் என்று தெரியாமல் கஞ்சா கேசில் பிடித்து லாக்கப்பில் வைத்து அடித்தோம். நாங்கள் அவனை கொல்லவில்லை என்கிறார்கள் மதுரை செல்லுார் போலீஸ்காரர்கள். அப்படியானால் அந்த பையனை கொன்றது யார்? ஏன்? வில்லன் கும்பலிருந்து தனது மகள்களை காப்பாற்றினாரா? சப்இன்ஸ்பெக்டர் ராஜா மலைச்சாமி. இதுதான் பாலு.எம் இயக்கிய ’போலீஸ்பேமிலி’ படத்தின் கதை.

வில்லன், போலீஸ் சம்பந்தப்பட்டு பல கதைகள் வந்திருந்தாலும் இது வித்தியாசமானது. தனது மகன் இறந்ததால், அதேபோல் அந்த போலீஸ்காரர்களின் குடும்பத்தினர் இறக்க வேண்டும், என் வேதனையை அவர்கள் அடைய வேண்டும் என்று போலீஸ்காரர்களின் குடும்பத்தை கொடூரமாக கொல்ல துடிக்கிறார் பருத்திவீரன் சரவணன். அப்போது தனது இரண்டு மகள்களை அழைத்துகொண்டு ஊர்,ஊராக ஓடுகிறார் கதைநாயகன் ராஜா மலைச்சாமி. அவரை வில்லன் கும்பல் சுற்ற என்ன நடந்தது? வில்லன் மகனை கஞ்சா கேசில் பிடிக்கும் போலீஸ்காரர் காதல் சுகுமாருக்கும், வில்லனுக்கும் என்ன தொடர்பு என்றரீதியில் படத்தின் கதை விறுவிறுப்பாக நடக்கிறது. கிளைமாக்ஸ் டுவிஸ்ட் யாரும் எதிர்பாராதது.

படத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை சிறப்பாக நடித்து இருக்கிறார் காதல் சுகுமார். அவர் சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் உருக்கம். கிளைமாக்சில் அவர் கேரக்டர் மாறுவதும் செம. பாசக்கார அப்பாவாக, நேர்மையான போலீசாக கலக்கியிருக்கிறார் ராஜா மலைச்சாமி. மகள்களை காப்பாற்ற அவர் துடிப்பதும், ஓடுவதும் பதட்டமடைய வைக்கிறது. போலீஸ்காரர்களின் மறுபக்கத்தை, அவர்களின் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களை விரிவாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

வில்லன் பருத்திவீரன் சரவணன், அவர் கும்பலை சேர்ந்தவர்கள், போலீஸ்காரர் மகள் நிஷா, அவர் காதலன், போலீஸ் அதிகாரிகள், மோசமான குணமுள்ள அந்த எம்எல்ஏ என பலரும் மனதில் நிற்கிறார்கள். இரண்டு தரப்புக்குகான மோதல், சேசிங், இழப்பு மற்றும் ஒவ்வொரு கேரக்டர்களின் பின்னணி ஆகியவை படத்தின் பிளஸ். போலீஸ்கதைகளை ரசிப்பவர்களுக்கும் போலீஸ் பேமிலி பிடிக்கும்.

கொலைச்சேவல்

தன் குடும்பத்தின் ஜாதி பாசம், ஜாதி பெருமையை தவிர்த்துவிட்டு, பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கலையரசனை காதல் திருமணம் செய்கிறார் தீபாபாலு. கலையரசனின் கிராமத்து வீட்டில் வசிக்கிறார். நிறைமாத கர்ப்பிணியாக தீபா பாலு இருப்பதால் கலையரசன் குடும்ப வழக்கப்படி அனைவரும் குல தெய்வம் கோயிலுக்கு செல்கிறார்கள். அப்போது கோபத்தில் இருக்கும் தீபாபாலுவின் அப்பாவும், அவரின் உறவினர்களும் காட்டில் இருக்கும் அந்த கோயிலுக்கு வர, என்ன நடக்கிறது என்பது ’கொலைச்சேவல்’ படத்தின் கதை.

இப்படத்தை வி.ஆர்.துதிவாணன் இயக்கியிருக்கிறார். கலையரசனின் உறவினர்கள் குலதெய்வம் கோயிலுக்கு செல்வதில் இருந்து கதை தொடங்குகிறது. கோயிலில் நடக்கும் விஷயங்கள், கோயிலுக்கு பைக்கில் கலையரசன், தீபா வருவது, இதற்கிடையில் பிளாஷ்பேக்கில் அவர்கள் காதல் மலர்ந்த கதை என படம் மெதுவாக செல்கிறது. தாத்தா பாட்டி சம்பந்தப்பட்ட உரையாடல், செல்ல சண்டை இன்ட்ரஸ்ட்டிங். படத்தில் என்னவோ நடக்கப்போகிறது என்று அனைவரும் எதிர்பார்க்கும்போது அந்த குல தெய்வம் கோயில் சாமி சிலை முன்பு தீபா பாலு குடும்பத்தினர் கொலைவெறியில் சில விஷயங்கள் செய்ய, மனம் பதைபதைக்கிறது. என்ன நடந்தது என்பது கிளைமாக்ஸ்.

கலையரசன், தீபாபாலு நடிப்பு ஓகே. கிராமத்து மனிதர்களின் பேச்சும், கோயிலில் நடக்கும் அரட்டைகளும் கொஞ்சம் சுவாரஸ்யம். பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு அருமை. கலையரசன் காதல் சம்பவங்களும் ரசிக்கவைக்கிறது. ஆனால், கிளைமாக்ஸ் ரொம்பவே உச்சம். அதை ஏற்றுக்கொள்பவர்களுக்கு படம் பிடிக்கலாம். மற்றவர்களுக்கு என்னப்பா, இப்படியொரு படமா என்று விமர்சனம் செய்வார்கள். ஆணவக்கொலையை இவ்வளவு வீரியமாக, ரத்தமும் சதையுமாக எந்த தமிழ் படத்திலும் காண்பித்தது இல்லை. தனது கருத்தை சொல்வது இயக்குனர் உரிமை என்றாலும், சினிமா மீடியம், பார்வையாளர்கள், வியாபாரம் உணர்ந்து, அதற்கு தக்கப்படி கிளைமாக்சை எடுத்து இருக்கலாம்.

வெஞ்சென்ஸ்

கலெக்டரான அபர்ணதி யாரை பழிவாங்க நினைக்கிறார், அவரை யார் பழிவாங்கினார்கள், அதனால் அவர் வாழ்க்கையில் என்னென்ன பாதிப்பு ஏற்பட்டது என்பதை அரசியல் கலந்து சொல்லும் படம் வெஞ்சன்ஸ். இப்படத்தை ராகுல் அசோக் இயக்கியிருக்கிறார். முதற்பாதியில் கலெக்டராகவும், பிற்பாதியில் அரசியல் அட்வைசராகவும் சிறந்த நடிப்பை தந்து இருக்கிறார் அபர்ணதி. அவரின் உடை, நடை, பாடிலாங்குவேஜ், கோபம், திட்டம், பழிவாங்கல் என அனைத்தும் சிறப்பு. சில காட்சிகளில் வீரமாகவும், சில காட்சிகளில் உருக்கமாகவும் கலக்கியிருக்கிறார். மத்திய அமைச்சராக வரும் ஜான்விஜயையும் தனக்கே உரிய டயலாக் டெலிவரி, நடிப்பில் கவர்கிறார். அரசியல்வாதிகளாக வரும் இளவரசு, லிவிங்ஸ்டன் தங்கள் அனுபவத்தால் அந்த கேரக்ரை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

கற்பனை மாவட்டம், கற்பனை மாநிலம் என காண்பித்து இருப்பது படத்தின் நம்பகத்தன்மையை கெடுக்கிறது. அதேபோல் அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சில உண்மை சம்பவங்களில் பாதிப்பு, சில உண்மை கேரக்டர்களின் சாயல் தெரிகிறது. அதை இன்னும் விரிவாக, அழுத்தமாக சொல்லியிருந்தால் படம் பேசப்பட்டு இருக்கும். ஒரு கலெக்டருக்கு இவ்வளவு அதிகாரமா? அவர் ஏன் இப்படி மாறினார் என்பதற்கு வலுவான காரணங்கள் இல்லை. திரைக்கதையில் கோர்வை இல்லை. நல்ல கதை. ஆனால், சொன்ன விதத்தில் குழப்பம், விறுவிறுப்பு இல்லை.கிளைமாக்ஸ், அதில் நடக்கும் விஷயங்களும் நம்பும் படியாக இல்லை. அபர்ணதியை ரசிப்பவர்கள் மட்டும் இந்த வெஞ்சென்சை ரசிப்பார்கள்

வெளவல்ஸ்

5 இயக்குனர்களின், 5 கதைகளின் தொகுப்பே வெளவல்ஸ். கிட்டத்தட்ட 5 குறும்படங்களின் தொகுப்பு எனலாம். இந்த 5 குறும்படங்களும் வெவ்வேறு ஜானர் என்றாலும், காதல்தான் முக்கியமான கரு. யூகி சேது, சின்னி ஜெயந்த், ராஜ் ஐயப்பா, சம்யுக்தா விஸ்வநாதன், நண்டு, தீபக் ரமேஷ், பரமேஷ், காஜல் செளத்ரி, பீட்டர்.கே, சரத் ரவி, அக்‌ஷிதா போபையா, பிரியங்கா சந்திரசேகர், பரத் போபண்ணா, விஜிதா வசிதா என ஐந்து கதைகளில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப, பிரஷ் ஆக, எனர்ஜியாக நடித்திருக்கிறார்கள். இதில் ராஜ்அய்யப்பா நடிப்பு உருக்கம். சின்னிஜெயந்த் வயதானவர்களின் காதல், திருமணம் பற்றி பேசுவது டச்சிங். யூகிசேது தனக்கே உரிய தனிபாணியில் கலக்கியிருக்கிறார்.

கடைசியில் வரும் விஜிதா வசிதா நடித்த ஆக்சன் கலந்த காதல் விறுவிறுப்பு. ஆனால், சில போர்ஷன் நீளமாக இருப்பதும், பேசிக்கொண்டே இருப்பதும் போரடிக்கிறது. திலீப் குமார், ஹேமந்த் குமார், சங்கீத், சந்தோஷ் ரவி, ஜெகன் ராஜேந்திரன் என ஐந்து இயக்குநர்களும் ஆளுக்கொரு கதையை எழுதியிருந்தாலும், ஒவ்வொன்றிலும் புதுமை. சரவண சுப்ரமணியம் இசை பிளஸ். ஓடிடி படங்களை விருப்புவர்கள், புதுமை விரும்பிகளுக்கு. குறும்படங்களை ரசிப்பவர்களுக்கு வெளவல்ஸ் பிடிக்கும்.

அந்தோனி

கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி, ஆஷனா நடிக்க, சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இணைந்து இயக்கியுள்ள இலங்கை படம் அந்தோனி. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் சார்ந்து ஏராளமான கதைகள் உருவாகியுள்ளன. அந்த வகையில் போருக்குப் பிந்தைய வாழ்வு பற்றி அந்தோனி பேசுகிறது. ‘அந்தோனி’ என்கிற பாத்திரத்தின் மூலம் இன்றைய இலங்கையில் புதுவாழ்வு வாழ விரும்பும் ஒரு குடிமகனின் வாழ்க்கையை இயக்குனர் பதிவு செய்துள்ளார். இலங்கை மீனவரான கயல்வின்சென்ட் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும்போது கடலில் மிதக்கும் டிஜே பானுவை பார்க்கிறான். அவரை காப்பாற்றி அவருடன் வாழுகிறார். அவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைக்கு ஒரு அபூர்வ நோய் வர, அந்த குடும்பம் என்ன ஆனது. நடுக்கடலில் படகில் அந்தோனி என்ன முடிவெடுத்தான் என்பது கிளைமாக்ஸ்.

கயல்வின்சென்ட், டிஜே பானு, சிறுமி வான்நிலா ஆகியோர் அந்த கேரக்டராகவே வாழ்ந்து இருக்கிறார்கள். படம் முழுக்க முழுக்க இலங்கையில் உருவாகியுள்ளது. ஒளிப்பதிவாளர் ரிஷி செல்வம் தனது முத்திரையை பதித்து இருக்கிறார். இளையராஜாவின் இசையும், பாடல்களும் படத்துக்கு உயிர். முதல் பாதியில் மெல்ல மெல்ல நகரும் கதை போகப் போக வேகமெடுத்து இரண்டாவது பாதியில் உணர்ச்சிகளின் ஓட்டத்தில் சூடு பிடிக்கிறது. போர், துப்பாக்கிக் குண்டு சத்தம், ரத்தம்,பழிவாங்கல் வன்முறை ஆகியவை இல்லாத அன்பை சொல்லும் இலங்கை படம் தான் இந்த அந்தோனி.

மேட் இன் கொரியா

ரா.கார்த்திக் இயக்கத்தில் பிரியங்காமோகன் நடித்துள்ள படம் ’மேட் இன் கொரியா’. பெயருக்கு ஏற்ப கதை கொரியாவில் நடக்கிறது . தமிழகத்தில் இருந்து கொரியாவுக்கு செல்ல பிரியங்கா துடிப்பது ஏன்? கொரியா செல்லும் முன்பு அவர் வாழ்வில் நடந்த மாற்றம், கொரியாவில் அவர் சந்திக்கும் பிரச்னைகள், அங்கே கிடைக்கும் நட்பு, பாசம், அவர்கள் சாதிக்கும் விஷயம் என கதை அவ்வளவு பிரஷ்.

குறிப்பாக, கொரியா கலைஞர்களின் நடிப்பு, அந்த லொகேஷன், அவர்கள் நடத்தும் ஓட்டல், அதில் கிடைக்கும் வெற்றி என படம் விறுவிறுப்பாக செல்கிறது. கொரியாவில் பிரியங்காவுக்கு ஆதரவு அளிக்கும் இளைஞன், வயதான பெண் கேரக்டர், நடிப்பு, அவர்கள் மூலம் சொல்லும் விஷயம் நச். கொரியா நண்பர்கள் இந்தியாவுக்கு வரும்போது நடக்கும் சீன்கள் கலகல. ஒவ்வொரு சீனையும் ரசி்த்து நடித்து இருக்கிறார் பிரியங்காமோகன். அவர் பேச்சு, உடல் மொழி, காஸ்ட்யூம், தன்னம்பிக்கை செயல்கள் படத்தின் பிளஸ். ஒட்டு மொத்தமாக கொரியாவுக்கு சென்ற வந்த உணர்வை மேட் இன் கொரியா தருகிறது.

தமிழில் இது புதுமுயற்சி, மேலும் முதன் முயற்சி. ரா.கார்த்திக்கின் இயக்கம், பிரியங்காமோகனின் நடிப்பு,படத்தின் கதை ஆகியவை மேட் இன் கொரியாவை, ஹேப்பி இன் கொரியாவாக மாற்றி ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தத் தருகிறது. நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் டிரென்டிங்கில் இருக்கிறது.

சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.