பன்னாட்டு நிறுவனங்களில் தமிழர்கள் பணிபுரிய கருணாநிதி தான் காரணம் – கவிஞர் வைரமுத்து!

நாசா, மைக்ரோசாப்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் தமிழர்கள் இன்று பணிபுரிய கருணாநிதி தான் காரணம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100- வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சென்னை தெற்கு…

நாசா, மைக்ரோசாப்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் தமிழர்கள் இன்று பணிபுரிய கருணாநிதி தான் காரணம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100- வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் தொடர்ந்து 53 வாரங்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக கவிஞர் வைரமுத்து தலைமையில் சென்னை குருநானக் கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் ‘இசைபடு கவியரங்கம்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், கவிஞர்கள் கபிலன், பா.விஜய், விவேகா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கவிஞர்கள் பாடல் வரிகளை மேடையில் தந்த உடனே அந்த பாடல் வரிகளுக்கு இசையமைப்பாளர் பரத்வாஜ் தலைமையிலான இசை குழுவினர் மற்றும் பாடகர்கள் இசையமைத்து பாடல்களை பாடினர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து கூறியதாவது:

நாசா, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களில் தமிழர்கள் பணியாற்றுவதற்கும் கருணாநிதியே காரணம். கருணாநிதியின் புகழை இன்றைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் கொண்டு சேர்க்க வேண்டியது திமுகவின் கடமையாகும். இது ஆட்சிக்கும் கட்சிக்கும் நல்லது.

கருணாநிதி தன் வாழ்நாளில், மக்களின் சுக துக்கங்களில் தொடர்ந்து பங்கெடுத்தவர். அந்த வகையில் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்கமும் ஒடிசா ரயில் விபத்து சம்பவம் ஒன்றாக நிகழ்ந்ததால், அந்த துக்கத்திலும் கருணாநிதி பங்கெடுத்து விட்டார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.