லாட்டரி சீட்டை கொண்டு வர வேண்டும் என்று நான் சொன்னதன் நோக்கத்தை யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் நகராட்சி சார்பில் நடந்த தடுப்பூசி முகாமை நேற்று பார்வையிட்ட, கார்த்தி சிதம்பரம் எம்.பி, ’ தமிழகத்தில் லாட்டரி சீட்டு மறைமுகமாக விற்கப்பட்டுதான் வருகிறது. அதை அரசே விற்றால் கோடி, கோடியாக பணம் கிடைக்கும். அந்த வருமானத்தை, ஏழை எளிய மாணவர்களின் மேல் படிப்புக்கும், தரமான மருத்துவ உதவிக்கும் பயன்படுத்தலாம் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி ப. சிதம்பரம் எம்.பி, இதுகுறித்து விளக்கம் அளித்தார். ஏழைகளுக்கு தரமான சுகாதாரம், ஏழை மாணவர்களுக்கு இலவச கல்லுாரி மேற்படிப்பு வேண்டும் என்பதற்காக, லாட்டரி சீட்டை கொண்டு வரலாம் என்று, தான் கூறிய யோசனை விவாதப் பொருளாக மாறி இருக்கிறது என்று தெரிவித்தார்.
லாட்டரி சீட்டின் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு, தரமான மருத்தும் ,கல்லூரி மாணவர்களுக்கான இலவச கல்வியை கொடுக்க முடியும் என்றும், இதனை தவிர, லாட்டரி சீட்டு இல்லாமல், வேறு சிறப்பான வகையில் வருமானம் வந்தாலும், ஏழை மக்களுக்கு தரமான மருத்துவம், இலவச கல்லூரி படிப்பு, இரண்டையும் கொடுக்க முடிந்தால் அதனை நான் வரவேற்கிறேன் என்றும் கூறினார்.







