காய்ச்சல் அறிகுறியுடன் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவிற்கு கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது, இந்நிலையில், இன்று அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அங்கு அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் வரும் ஞாயிற்றுக்கிழமைவரை அவர் மருத்துவமனையில் இருப்பார் எனக் கருதப்படுகிறது.
கர்நாடகாவில் கொரோனா தொற்றுப் பாதிப்பு அதிகரித்து வருவதால், முழு ஊரடங்கு அமல்படுத்துவதற்கான திட்டமில்லை என்றும் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கடந்த 13ஆம் தேதி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். அதைத் தொடர்ந்து, வரும் 18ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த எதிர்க்கட்சியினருக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 14,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 3,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.







