திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழக அரசும், மத்திய அரசும் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். அந்தவகையில், நேற்று நடிகர் விவேக் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி பற்றிய அச்சம் பொதுமக்களுக்கு உள்ளது. அதை முறியடிக்கவே அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







