மகா கும்பமேளாவில் பங்கேற்ற சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,17,353 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 1,42,91,917 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பல மாநிலங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரிதுவார் புனித தளத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 1ம் தேதி முதல் இம்மாதம் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது இந்த விழாவில் பங்கேற்றிருந்த சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்திந்திய அகதா பரிஷத் அமைப்பின் தலைவரான நரேந்திர கிரியும் பாதிக்கப்பட்டுள்ளார். தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் ரிஷிகேஷில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை ஹரிதுவாரின் தலைமை மருத்துவ அதிகாரி உறுதி செய்துள்ளார்.
இதன் காரணமாக தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
முன்னதாக கும்பமேளா தொடங்கிய முதல் 5 நாட்களில் 2,167 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,185 கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,74,308 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







