நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தன.
இதனை தொடர்ந்து தன் வாழ்வின் முக்கிய முடிவு ஒன்றை ஜூன் 11-ந்தேதி தெரிவிக்க இருப்பதாக ராகவா லாரன்ஸ் கூறி இருந்தார். ஆனால் இயக்குநர் பாரதிராஜாவின் மறைவையொட்டி நேற்று அறிவிக்க இருந்த முக்கிய முடிவை அவர் இன்று தள்ளிவைத்தார்.
இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-
நான் அரசியலில் நுழைவேன் என்று ஒருபோதும் கற்பனை செய்ததில்லை. பணம் சம்பாதிக்கும் எண்ணமோ அல்லது தேர்தலில் போட்டியிடும் எண்ணமோ எனக்கு இருந்ததில்லை.
நான் நம்பும், எனக்கு நெருக்கமான ஒருவர் அரசியலில் நுழைந்தால், நான் ஒரு தனிநபராகச் செய்து வருவதை விடப் பெரிய அளவில் சமூகத்திற்குச் சேவை செய்ய, அவர்களுக்குத் துணையாக நின்று அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்பது மட்டுமே என் ஒரே எண்ணமாக இருந்தது. இன்று, சூழ்நிலைகள் என்னை அரசியலில் நுழைய வேண்டிய ஒரு நிலைக்குக் கொண்டு வந்துள்ளன.
இன்று காலை 10:00 மணிக்கு நான் பகிரும் இந்தக் காணொளியில் , அரசியல் குறித்த எனது புரிதல், அது என் வாழ்வில் எப்படி வந்தது, அரசியல் குறித்த என் தாயின் கண்ணோட்டம், மற்றும் என் பயணத்தை வடிவமைத்த சில முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றி என் இதயத்திலிருந்து முழுமையான நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பேசியுள்ளேன்.
இந்தக் காணொளியை இறுதிவரை பார்த்து, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களுடன் இந்த முக்கியமான அடியை நான் எடுத்து வைக்கும்போது, உங்கள் ஆலோசனையும் வழிகாட்டுதலும் எனக்கு மிகவும் மதிப்புமிக்கவை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




