காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இதில், யார் அடுத்த காங்கிரஸ் தலைவர் என அறிவிக்கப்படவுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கான எதிர்ப்பார்ப்பு அக்கட்சியினருக்கு மட்டும் இல்லாமல் பலரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக தனக்கு விருப்பம் இல்லை என தெரிவித்ததையடுத்து, மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டது.
மேலும் நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலையில் நிறைவு பெற்றது. பின்னர் அனைத்து மாநில ஓட்டுப்பெட்டிகள் மூடி சீல் வைக்கப்பட்டு டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்நிலையில், தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. அனைத்து வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குச்சீட்டுகள் மொத்தமாக சேர்க்கப்பட்டு அதன் பின் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என கூறப்படுகிறது.
எந்த மாநிலத்தில் யாருக்கு எத்தனை வாக்குகள் என்பதை தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. வேட்பாளர் வாரியாக வாக்குகள் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்ட பின்பு, இன்று பிற்பகலில் முடிவுகள் வெளியாகும். அதன் பின் காங்கிரஸ் தலைவர் யார் என்ற எதிர்ப்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
-இரா.நம்பிராஜன்








