ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முன்னிலையில் திறந்துவைக்கப்பட்டது.
ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த அக்டோபர் 10ம் தேதி தொல்லியல் அகழாய்வு பணிகள் தொடங்கியது. மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண் ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. இதற்காக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் 10க்கும் மேற்பட்ட குழிகள் அமைக்கப்பட்டு அகழாய்வு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அகழாய்வு பணியில் ஏற்கனவே 12 முதுமக்கள் தாழிகள், சங்க காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான வாழ்விடம் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது 3500 ஆண்டுகள் முதல் 150 ஆண்டுகள் வரை ஆதிச்சநல்லூரில் மனிதர்கள் வாழ்ந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட சுண்ணாம்பு தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினம் ஆதிச்சநல்லூரில் இரண்டாம் அடுக்கில் உள்ள 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் ஆதிச்சநல்லூரில் நடந்து வந்த அகழாய்வு பணிகளைப் பார்வையிடத் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி வருகை தந்திருந்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உடன் வந்திருந்தார். இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முன்னிலையில் அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி திறந்துவைக்கப்பட்டது. அப்போது, அதில் இருந்த மனிதனின் எலும்புக் கூடுகள், மண்டை ஓடு, சிறு பானைகள், கலயங்களைக் கனிமொழி பார்வையிட்ட பின் அவருக்கு மத்திய தொல்லியல் துறை இயக்குநர் அருண்ராஜ் ஆய்வுப் பணிகள் குறித்து விளக்கமளித்தார்.








