காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் ஏரியிலுள்ள மீன்களை பிடிப்பதற்காக திருட்டத்தனமாக மின் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றி வருவது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இந்தாண்டு பொய்த்து போன பருவ மழையின் காரணமாக பல ஏரிகள், குளங்கள் பாதிக்கும் குறைவாகத் தான் நிரம்பி உள்ளன.ஏற்கனவே பருவம் தவறிய மழையின் காரணமாக விவசாயப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திருட்டுத்தனமாக ஏரியின் நீரை மீன் பிடிப்பதற்காக வெளியேற்றிவரும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலத்திலேயே அதிக ஏரிகளை தன்னகத்தே கொண்ட காஞ்சிபுரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியிலுள்ள ஏரிகள் கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக ஓரளவு நிரம்பியிருந்த நிலையில் விவசாயிகள் மும்முரமாக விவசாய பணிகளில் ஈடுபட்டு முதல்போக நெல் அறுவடையை தற்போது தான் முடித்து அடுத்தகட்ட பணிகளில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் பொதுப்பணித்துறை சார்பில் ஏரிகள் மீன் வளர்ப்பதற்காக குத்தகைதாரர்களுக்கு ஏலம் விடப்பட்டிருந்தது. இந்நிலையில் விதிகளுக்கு புறம்பாக ஏரிகளை குத்தகைக்கு எடுத்தவர்கள் மின் மோட்டார்கள் மூலம் ஏரியிலுள்ள நீரை வெளியேற்றி வருகின்றனர்.இது விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சுவதினால் விவசாயத்திற்கு தண்ணீரின்றி பயிர்கள் காயும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
—-வேந்தன்







