கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட புகார் குறித்து விசாரிக்க நிர்வாகம் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் மற்றும் முன்னாள் டிஜிபி லத்திகா சரண் உள்ளிட்ட 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ருக்மணி தேவி கவின் கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நடனம் மற்றும் இசைக்கு புகழ்பெற்ற இக்கல்லூரியில், கடந்த சில நாட்களாக, இங்கு பணிபுரிந்து வரும் பேராசிரியர் ஒருவர் ஏராளமான மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தருவதாக ஆசிரியர் ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையதளத்தில் வைரலானது. மேலும் இதுதொடர்பான வீடியோவும் அதிக அளவில் பகிரப்பட்டன.
இதையடுத்து தேசிய மகளிர் ஆணையம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டது. தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் அமைப்பினர் சிலர் இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் கடிதம் அனுப்பியிருந்தனர்.
இதனை தொடர்ந்து, மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் ஹரிபத்மனை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் சார்பாக பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண், மருத்துவர் ஷோபா வர்த்தமான் ஆகிய மூன்று பேர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட கல்லூரி நிர்வாகம், உதவிப் பேராசிரியர் ஸ்ரீ ஹரிபத்மன், சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாலும், விசாரணை நிலுவையில் உள்ளதாலும், கல்லூரியில் இருந்து பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அறக்கட்டளையின் நிர்வாகத்தை வலுப்படுத்த புதிய மாணவர் ஆலோசகர் மற்றும் ஒரு சுயாதீன ஆலோசனைக் குழு உடனடியாக நியமிக்கப்படும் என்றும், மறு அட்டவணைப்படி தேர்வுகளில் கலந்து கொள்ளுமாறு மாணவர்களிடம் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கலாக்ஷேத்ரா அறக்கட்டளை அதன் மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதிலும், அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய சூழலை வழங்குவதிலும் முழுமையாக உறுதிபூண்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








