சேந்தமங்கலத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விழா குழு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நாமக்கல், கரூர், திண்டுக்கல், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட 400-காளைகளும் , 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றன. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வந்த மாடுபிடி வீரர்களுக்கு சுகாதாரத்துறை சார்பிலும், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பிலும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து போட்டிக்கு முன்பாக ஜல்லிக்கட்டு போட்டியின் விதிமுறைகளின்படி மாடுப்பிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிபாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கும்,. பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பைக், சைக்கிள், பீரோ, கட்டில் தங்க நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
இப்போட்டியினை காண சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர். எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருப்பதற்காக மாவட்ட எஸ்.பி கலைச்செல்வன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விழாவில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் , எம் பி ராஜேஷ்குமார், எம்எல்ஏ ராமலிங்கம், மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பி.ஜேம்ஸ் லிசா










