தனது பெயரை பயன்படுத்தி, இன்ஸ்டாகிராமில் போலி கணக்கைத் தொடங்கி மர்ம நபர்கள் பணமோசடியில் ஈடுபடுவதாக நடிகர் ரவிமரியா புகார் அளித்துள்ளார்.
ஆசை ஆசையாய், மிளகா போன்ற படங்களின் இயக்குனரும், பிரபல நடிகருமான ரவி
மரியா, தனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி, மர்ம நபர்கள் சிலர் பண மோசடியில் ஈடுபடுவதாக, சென்னை தென்மண்டல காவல்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.
காவல்துறையினரிடம் புகார் அளித்தப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரவி மரியா, “இன்ஸ்டாகிராமில் என் பெயரில் போலி கணக்கு தொடங்கி, என்னுடைய நண்பர்களின் பட்டியலை பயன்படுத்தி, அவசர தேவைக்கு பணம் வேண்டும் என ரூபாய் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : கொங்கு மண்டலத்தில் மீண்டும் பலத்தை நிரூபித்த திமுக
நான் யாரிடமும் இதுவரை பண உதவி கேட்டதில்லை. ஆன்லைன் மோசடிகள் தற்போது அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆன்லைனில் நடைபெறும் மோசடி குறித்து விரைவில் படம் எடுக்கப் போகிறேன். செல்போனில் போலி லிங்க்குகளை அனுப்பி பல்வேறு மோசடி நடைபெறுகிறது. செல்போன் மூலம் தான் அதிக அளவிலான சைபர் குற்றங்கள் நடைபெறுகிறது” என்று தெரிவித்தார்.
– ரெ.வீரம்மாதேவி







