தனியார் மையங்களில் தடுப்பூசி செலுத்துவது குறைந்து வருவது கவலையளிக்கிறது – மத்திய சுகாதாரத்துறை செயலாளர்

தனியார் மையங்களில் தடுப்பூசி செலுத்துவது குறைந்து வருவது கவலையளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட 15 மாநிலங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும்…

தனியார் மையங்களில் தடுப்பூசி செலுத்துவது குறைந்து வருவது கவலையளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட 15 மாநிலங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும் தடுப்பூசி திட்டத்தின் உயர் அதிகாரிகள் உடன் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று காணொலிக் காட்சி வாயிலாக உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.

இதில் பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா ஆகிய தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட வழிமுறைகள் மற்றும் சமீபத்திய அறிவிப்புகள், இந்த மாநிலங்களில் உள்ள தனியார் கொரோனா தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி கொள்முதலின் வளர்ச்சி மற்றும் நிர்வாகம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் தனியார் மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி குறைந்து வருவது கவலை அளிப்பதாகவும், தனியார் மையங்களில் தடுப்பூசியின் கொள்முதல் மற்றும் தடுப்பூசிகள் செலுத்தப்படுவது குறித்து தினசரி ஆய்வை மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண்

தனியார் மையங்கள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கிடையே இடர்பாடுகள் இருந்தால் அதனைத் களைவதற்கு விரைவான, ஆக்கபூர்வமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறும் மாநிலங்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

அதேபோல சில மாநில்ங்களில் உள்ள தனியார் மையங்களுக்கு கொடுக்கப்படும் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்படாமல் உள்ளது, அதனை முறையாக ஆய்வு செய்து தனியார் மையங்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள் முறையாக முழுமையாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் அறிவுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.