முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் சினிமா

சாதியத்திற்கு எதிரான காட்டுப்பேச்சி ’மாடத்தி’


சி.பிரபாகரன்

கட்டுரையாளர்

லீனா மணிமேகலை இயக்கத்தில், செம்மலர் அன்னம், அஜ்மினா கசிம் ஆகியோர் நடிப்பில் ஓடிடியில் வெளிவந்து, பலரின் கவனத்தை ஈர்த்துள்ள படம் தான் மாடத்தி. புதிரை வண்ணார் சமூக மக்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகளையும், வாழ்வியல் சிக்கலையும் பேசும் படமாக உருவாகியிருக்கிறது இந்த மாடத்தி.

ஒரு தம்பதி காட்டுப்பகுதியில் நாப்கினை தேடி அலைந்து, ஒரு குடிசையின் கதவைத் தட்டுவதில் ஆரம்பிக்கும் திரைக்கதை, அகிரா குரோசவாவின் ட்ரீம்ஸ் திரைப்படத்தில் வான் கோ-வின் ஓவியங்களின் வழியே கதை ஆரம்பிப்பது போல, குடிசையில் சிறுவன் வரைந்திருக்கும் ஓவியங்கள் மூலம், தொடங்குகிறது.

புதிரை வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த தம்பதிக்கு பிறந்த சிறுமி யோசனா, தான் சார்ந்த சமூக புரிதல் இல்லாத குழந்தையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், யோசனாவின் பெற்றோர் சாதிய ஒடுக்குமுறைகளை கடந்து, எவ்வாறு தங்கள் வாழ்க்கையை மகளுடன் வாழ்கின்றனர் என்பதே மீதிக்கதையாகும்.

தாழ்த்தப்பட்டு, ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூக மக்களின் சோகம் சொல்லி மாளாது. ஆனால், இதர சாதியினருடன் பட்டியல் சமூக மக்களும் புறக்கணித்த சமூகமாக புதிரை வண்ணார் சமூகம் இருந்துள்ளதை அப்பட்டமாக, வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது மாடத்தி திரைப்படம்.

இந்த நிலையில் தான், தன் மகளை பார்த்து, “நீ ஏன்தான் இந்த சாதியில வந்து அழகா பொறந்து தொலைச்சியோ.. இவனுங்க நம்மல நிம்மதியா இருக்க விட மாட்டானுங்க” என கூறும் வார்த்தைகள்… ரசிகர்களிடம் கேள்வியை எழுப்புகிறது.

பிணங்களின் மீது சுற்றப்பட்ட துணிகளையும், மாதவிடாய் துணிகளை துவைக்க மட்டுமே பெரும்பாலும் இச்சமூகத்தினர் அனுமதிக்கப்படுவதும், வேறு வழியின்றி அதனை செய்ய நேரிடுவதுமாக, ஒடுக்குமுறையின் வடிவங்களை நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து போராடியும், இட ஒதுக்கீட்டாலும், அச்சமூகத்தினர் தற்போது ஓரளவு முன்னேறி இருந்தாலும், சாதிய கொடுமைகள் தொடரவே செய்கிறது என்கிறார் ’கோவேறு கழுதைகள்’ எழுதிய எழுத்தாளர் இமயம்.

“சாதி சான்றிதழ் பெறுவதற்கு சாட்சியாக கழுதையையோ, அடுப்பினையோ, அல்லது சக கிராமவாசி ஒருவரையோ சாட்சியாகவோ அதிகாரிகள் முன்பு காட்ட வேண்டும் என்ற நிலையே இருப்பதாக கூறுகிறார் ’தீண்டாமைக்குள் தீண்டாமை’ எனும் புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் லட்சுமணன்.

சாதிய ஒடுக்குமுறை எனும் பேரவலம் நிறைந்திருக்கும் சமூகத்தில், பட்டியல் சமூகத்தினரை விடவும், மோசமான ஒடுக்குமுறைகளை சந்தித்த புதிரை வண்ணார் சமூகத்தின் வலியை, முழுநீள படமாக பதிவு செய்திருப்பது தைரியமான முயற்சி என்றே கூறலாம்.

Advertisement:
SHARE

Related posts

குடும்ப அட்டை: புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை

Arivazhagan CM

விவாகரத்தான பெண்களை குறிவைத்து மேட்ரிமோனி மூலம் ஏமாற்றிய கும்பல் கைது

Ezhilarasan

“ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Arivazhagan CM