“மானல்லவோ கண்கள் தந்தது மயிலல்லவோ சாயல் தந்தது”

காதல் மயக்கத்தில் பலரும் கவிஞர்களாவது உண்டு… இன்று நேற்றல்ல.. திருக்குறள் முதல் குறுந்தொகை வரையிலான இலக்கியங்களில், பெண்களை வர்ணிக்கும் வரிகள் இடம்பெற்றுள்ளன. பெண்களை இயற்கையோடு ஒப்பிட்டு கவிபாடும் கவிஞர்கள், அவளின் அழகை, அழகாக வர்ணனை…

காதல் மயக்கத்தில் பலரும் கவிஞர்களாவது உண்டு… இன்று நேற்றல்ல.. திருக்குறள் முதல் குறுந்தொகை வரையிலான இலக்கியங்களில், பெண்களை வர்ணிக்கும் வரிகள் இடம்பெற்றுள்ளன.

பெண்களை இயற்கையோடு ஒப்பிட்டு கவிபாடும் கவிஞர்கள், அவளின் அழகை, அழகாக வர்ணனை செய்கின்றனர். மானே, என்பார் ஒரு கவிஞர். மயிலே என்பார் மற்றொருவர். இன்னும் சிலரோ, பெண்களின் கண்களை மீன் என்பர். குரல், குயிலென்பர். தங்கள் கற்பனைக்கேற்றவாறு வர்ணிக்கும் கவிஞர்கள் பெண்களின் கண்களுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பார்கள்…. ”

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு அணியெவனோ ஏதில தந்து” என்கிறான் வள்ளுவன்… அதாவது பெண்மானைப் போன்ற அச்சப் பார்வையையும் உள்ளத்தில் நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட நகைகளை அணிவித்திருப்பது எதற்காகவோ? என கேட்கிறான் வள்ளுவன். நீதிக்குப்பின் பாசம் திரைப்படத்தில், மான், மயில், தேனிதழ், சிலை என ஒட்டுமொத்தமாக மானல்லவோ கண்கள் தந்தது என பாடி முடித்து விடுவார் கவியரசு கண்ணதாசன்….

காலங்களில் அவள் வசந்தம் பாடலில் “அவள் கவிஞன் ஆக்கினால் என்னை” எனக்கூறி பெண்மையை பெருமைப்படுத்திய கவியரசு கண்ணதாசன், இன்று நானும் கவியாக யார் காரணம், இந்த நாணம் விளையாடும் விழி காரணமென பாடுகிறார். சிவந்த மண் திரைப்படத்தில் இடம்பெற்ற பார்வை யுவராணி கண்ணோவியம் பாடலில் “பாலென்று சொன்னாலும், பழமென்று சொன்னாலும், ஏனென்று தேன் வாடுமே” என பால், பழம், தேன் என அத்தனை இனிப்பான வார்த்தைகளால் பாமாலை கட்டியிருப்பார் கண்ணதாசன்…

கண்ணதாசன் அப்படி வர்ணித்தால், குழந்தையும் தெய்வமும் திரைப்படத்தில், அன்புள்ள மான்விழியே என்கிறார் வாலி. பெண்மைக்கு அழகு பூவின் மென்மையா?.. மயிலின் நளினமா?.. மான் விழியின் சாயலா?….என கேட்டு அந்த அழகான மான் விழியாளுக்கு, ஒரு ஆண் காதல் கடிதம் எழுதுவதாக கவிஞர் வாலி வர்ணிக்கிறார். முல்லை மலரே எனக்கேட்பதோடு, முத்துச்சுடரே என கொஞ்சி வழியும் வரிகளுடன் மெல்லிய இசையும் தாலாட்ட வைக்கிறது.

மானும் மயிலும் உள்ளவரை காதலும் உண்டு,கவிதையும் உண்டு என்பது மெய்தானே…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.