“எனது சமாதியில் கோபாலபுரத்து விசுவாசி என எழுதினால் போதும்”- அமைச்சர் துரைமுருகன் உருக்கம்

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாத்தின் போது அமைச்சர் துரைமுருகன், எனக்கென்று இருக்கும் புதைக்குழி சமாதியில் கோபாலபுரத்து விசுவாசி என எழுதினால் போதும் என உருக்கமாக பேசினார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல்…

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாத்தின் போது அமைச்சர் துரைமுருகன், எனக்கென்று இருக்கும் புதைக்குழி சமாதியில் கோபாலபுரத்து விசுவாசி என எழுதினால் போதும் என உருக்கமாக பேசினார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.

இதையடுத்து, 2023–24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 20ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். 21ம் தேதி வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண்பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து ஒவ்வொரு துறைவாரியான மானிய கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இன்று நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்திற்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், குடியானவன் என்ற முறையில் நீர்வளத்துறையை பெற்றிருப்பதில் மகிழ்ச்சி. என்றைக்காவது ஒரு நாளாவது மறையப் போகிறவன். எனக்கென்று இருக்கும் புதைகுழி சமாதியில் கோபாலபுரத்து விசுவாசி என எழுதினால் போதும் என்று உருக்கமாக பேசினார்.

தொடர்ந்து, வெள்ள நீர் மேலாண்மையை மேம்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் நீர்த்தேக்கங்களில் உள்ள வெள்ளக் கதவுகளின் இயக்கம் சிறப்பு மென்பொருள் உதவியுடன் ரூ.32 கோடி மதிப்பீட்டில் தானியங்கி மயமாக்கப்படும் உள்ளிட்ட நீர்வளத்துறையில் பல புதிய அறிவிப்புகளை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டு பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.