திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் 7-வது ஊதிய குழு அமல்படுத்த கோரி 100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏழாவது ஊதிய குழு அமல்படுத்த வேண்டும், பல ஆண்டு காலமாக செயல்படுத்தாமல் உள்ள பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது.
திருக்கோயில் பணியாளர்கள் செய்துவரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், அரக்கோணம் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், அ.தி.மு.க அமைப்புச் செயலாளருமான திருத்தணி கோ.அரி பங்கேற்று, திருக்கோயில் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
மேலும் அ.தி.மு.க வின் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது, என்றும் அவர் தெரிவித்தார். இந்த போராட்டத்திற்கு திருத்தணியில் 10 க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு வழங்கினர்.
—சௌம்யா.மோ






