பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் சென்னை தொழிலதிபரைக் கடத்த நெல்லையைச் சேர்ந்த ரவுடி கும்பல் திட்டமிட்டதாகத் தெரியவந்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேகப்படும்படியான நபர்கள் காரில் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் நுங்கம்பாக்கம் போலீசார் ரோந்து வாகனத்தில்
சம்மந்தப்பட்ட காரைத் தேடியபோது அந்தக் கார் மேயர் சிவசண்முகம் சாலை பகுதியில் உள்ள தனியார் விடுதியின் முன்பு நிற்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த கார் அருகில் சென்று விசாரிக்கச் சென்றபோது விடுதியின் உள்ளேயிருந்து வந்த இரு நபர்கள் போலீசாரிடம் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்து தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அந்த நபர்கள் போலீசாரிடம் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி தகாத வார்த்தைகளால் திட்டி கொன்றுவிடுவேன் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களைப் பிடிக்க முயன்றபோது 3 பேர் அருகிலிருந்த இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற நிலையில் கார் ஓட்டுநரைப் மடக்கிப் பிடித்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த நபர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பகுதியைச் சேர்ந்த செல்வமணி என்பதும், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கே.கே நகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரைக் கடத்துவதற்காக பெயர் தெரியாத நபர் ஒருவரால் வரவழைக்கப்பட்டதாகவும் வாக்குமூலம் அளித்தார். மேலும் விசாரணையில், செல்வமணியுடன் வந்து தப்பிச் சென்றவர்கள் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடிகளான கணேஷ், உதயா, பரமசிவம், முருகன் என்பதும் தெரியவந்தது. இதில் கணேஷ் மீது இரட்டை கொலை வழக்கு உட்பட பல குற்றவழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் அவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதியில் நடத்திய விசாரணையில், அவர்கள் தங்கியிருந்த அறை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபரான கணேசன் என்பவர் பெயரில் எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்த நிலையில், அவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெயர் தெரியாத நபரின் அறிவுறுத்தல் அடிப்படையில் அறை எடுத்ததாகவும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது அடுத்த உத்தரவு வரும்போதே தங்களுக்குத் தெரியவரும் எனவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
பின்னர் கைது செய்த இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய நெல்லையைச் சேர்ந்த ரவுடி கணேஷ் என்பவரைப் பிடித்தால் மட்டுமே வந்தவர்கள் யாரை எப்படி கடத்த திட்டமிட்டார்கள் என்பது குறித்த முழு விபரம் தெரியவரும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தப்பியோடிய ரவுடிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.









